2 நாள் தேர்தல் பிரச்சாரம்..!- பிரதமர் மோடி இன்று புதுவை வருகை

பிரதமர் மோடியின் சென்னை வருகை மற்றும் சென்னையிலேயே தங்கி இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
2 நாள் தேர்தல் பிரச்சாரம்..!- பிரதமர் மோடி இன்று புதுவை வருகை
Published on

தமிழகம் மற்றும் புதுவையில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. புதுவையில் வருகிற 9-ந் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. எனவே புதுவையில் அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி இன்று ஆதரவு திரட்டி பிரசாரம் செய்கிறார். இதற்காக இன்று மதியம் 12.35 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.

மாலை 3.25 மணிக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் புதுவை புறப்பட்டு செல்கிறார். 4.15 மணிக்கு புதுவை சென்றடையும் பிரதமர் மோடி அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

அஜந்தா சிக்னல் சந்திப்பு வந்து ரோடு ஷோவை தொடங்குகிறார். அண்ணா சாலை வழியாக அண்ணா திடல் வரை 1.7 கி.மீ. துாரத்துக்கு இந்த ஷோ சுமார் ஒரு மணி நேரம் நடக்கிறது. இதில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

பின்னர் மாலை 5.50 மணிக்கு புதுவையில் இருந்து ஹெலிகாப்டரில் சென்னை திரும்புகிறார்.

6.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து காரில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். இரவு அங்கு தங்குகிறார். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

எனவே, பிரதமர் மோடியின் சென்னை பயணத்தின்போது பிரசாரம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து நாளை (4-ந் தேதி) அவர் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டலிலேயே பா.ஜ.க. நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் அவர் சந்திக்கிறார்.

பிரதமர் மோடியின் சென்னை வருகை மற்றும் சென்னையிலேயே தங்கி இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மீனம்பாக்கம், கிண்டி பகுதிகள் காவல் துறையால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் இந்த பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னையில் கடந்த 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் (மே) 22-ந் தேதி வரை டிரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர் கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேண்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகரில் பறக்க விட தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com