

சென்னை:
பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கையால் பதுக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும், கருப்புப்பணம் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் பா.ஜ.க.வினர் கூறி வருகின்றனர். ஆனால், பணக்காரர்கள் இந்த நடவடிக்கையால் பயனடைந்ததாகவும், ஏழைகள் மட்டுமே வங்கிகளுக்கும், ஏ.டி.எம்.களுக்கும் அலைந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தந்தி டி.வி.யின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் பங்கேற்றார். அவரிடம் ‘காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒழிக்கப்பட்ட கருப்புப்பணம் பற்றி கூற முடியுமா?’ என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு:-
கருப்புப்பணத்தை எப்போதும் ஒழிக்க முடியாது. ஏனென்றால், இந்தியாவில் விசித்திரமான வருமான வரி விதிப்பு முறை பின்பற்றப்பட்டு வரப்படுகிறது. ஏறத்தாழ, சரிபாதி வருமானம் வருமான வரிக்கு உள்படாத வருமானம்தான். விவசாயம், அறக்கட்டளை, சமய நிறுவனங்கள், பழங்குடி மக்கள் மற்றும் வடகிழக்கு மக்களுடைய வருமானம் ஆகிய அனைத்தும் வருமான வரிக்கு உள்படாத வருமானமே.
வருமான வரிக்கு உள்பட்ட வருமானம் என ஒன்று உள்ளது. உள்படாதது என மற்றொன்று உள்ளது. ஒரு பக்கம் உள்ளவர் இன்னொன்றை சார்ந்து இருக்க வேண்டியது உள்ளது. அந்த பக்கம் உள்ள பணம், இந்த பக்கம் வரும், இந்த பக்கம் உள்ள பணம் அந்த பக்கம் செல்லும். இதனால், கருப்புப்பணம் என்பது ஒழிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.