சிங்கப்பூரில் இருந்து விஜயகாந்த் இன்று சென்னை திரும்பினார்

கண்ணில் நீர் வடிதல், தைராய்டு பிரச்சினை காரணமாக சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பினார்.
Published on

சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக சிங்கப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவ்வப்போது சென்று அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜயகாந்த்துக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது. கண்களில் இருந்து நீரும் வடிந்து கொண்டே இருக்கிறது. தைராய்டு பிரச்சினை காரணமாக அவரது கழுத்து பகுதி வீக்கமாகவே காணப்படும்.

உடல் ரீதியாக ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்காக விஜயகாந்த் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் அரசியல் பணிகளுக்கிடையே கிடைக்கும் நேரங்களில் ஓய்வும் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக மீண்டும் சிங்கப்பூர் சென்றார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக சென்ற அவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் மனைவி பிரேமலதாவும் உடன் சென்றார்.

அங்கு விஜயகாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் விஜயகாந்த் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

ஆஸ்பத்திரியில் நோயாளிகள் அணியும் சீருடையுடன் அவர் காணப்படுகிறார்.

சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்து விட்டு இன்று விஜயகாந்த் சென்னை திரும்பினார். அவர் வந்த விமானம் காலை 10.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது.

காலை 10.50 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுடன் வெளியே வந்தார். அவரை மைத்துனர் சுதீஷ், கட்சி நிர்வாகிகள் அனகை முருகேசன், பார்த்தசாரதி ஆகியோர் வரவேற்றனர். அப்போது விஜயகாந்த்தை நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் அவர் பேட்டி கொடுக்காமல் காரில் ஏறி சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com