

புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா கடந்த 23-ந்தேதி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நேரு அரங்கில் நடந்தது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். விழாவில் மாஸ் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற மாணவி ரபீக்கா அப்துல் ரகீமும் பங்கேற்றார்.
இந்த நிலையில் விழா அரங்கில் இருந்து ரபீக்கா திடீரென வெளியேற்றப்பட்டார். ஜனாதிபதி அரங்கை விட்டு வெளியேறிய பிறகே மீண்டும் அரங்கினுள் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது மாணவி ரபீக்கா தனக்கு வழங்கப்பட்ட தங்கப்பதக்கத்தை பெற மறுத்து விட்டார். சான்றிதழை மட்டும் பெற்றுக்கொண்டார். மாணவி விழாவில் இருந்து வெளியேற்றப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே மாணவி ஹிஜாப் (ஸ்கார்ப்) அணிந்திருந்ததால்தான் வெளியேற்றப்பட்டதாக தகவல் பரவியது. மாணவி வெளியேற்றப்பட்ட விவகாரம் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தரிடம் விளக்கம் கேட்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். அதன்படி விளக்கம் கேட்டு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பல்கலைக் கழக துணைவேந்தர் குர்மீத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பட்டம் பெறும் மாணவ- மாணவிகளுக்கு தன்னார்வ மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்தபடி பட்டங்கள், பதக்கங்களை கொண்டு வந்து தருகிறார். இந்த காட்சி வீடியோ பதிவில் இடம் பெற்றுள்ளது.
பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீசிங்கின் இந்த வீடியோ பதிவு மூலமாக மாணவி ரபீக்கா விழா அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கும், பல்கலைக்கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துள்ளார்.
பட்டமளிப்பு விழா முடிந்து மீண்டும் பல்கலைக்கழகம் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்பட வேண்டிய நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி வெளியேற்றப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளார்கள் என்ற தகவலாலேயே பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பட்டமளிப்பு விழாவில் தான் வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து மாணவி ரபீக்கா நிருபர்களிடம் கூறும் போது, “விழா அரங்கத்தில் இருந்த தன்னை பெண் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகன்ஷியா யாதவ் வெளியேற்றியதாக கூறினார். மேலும் ஹிஜாப் அணிந்திருந்ததற்காக தான் வெளியேற்றப்படவில்லை” என்றும் கூறியிருந்தார்.
இதனால் புதுவை போலீசாரே மாணவியை விழா அரங்கத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. பெண் போலீஸ் சூப்பிரண்டு அகன்ஷியா யாதவ் தாமாகவே மாணவியை வெளியேற்றினாரா? அல்லது அவரது உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வெளியேற்றப்பட்டாரா? என்பது தெரியவில்லை.
ஏனெனில் விழா அரங்கில் புதுவை போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்லாது ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளும் பணியில் இருந்தனர்.