

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 3 பவித்ரோற்சவ விழா நடைபெற உள்ளது. 22-ந்தேதி மரக்கன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு விழா தொடங்கப்படுகிறது.
ஆண்டு முழுவதும் அர்ச்சனைகள் மற்றும் விழாக்களின்போது பக்தர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களுக்கு தெரியாமலேயே சில தவறுகளை செய்கின்றனர். அதனால் கோவிலின் புனிதம் கெடாமல் இருக்க பவித்ரோற்சவ விழா ஆகம விதிப்படி நடைபெற உள்ளது.
இந்த சேவையில் பங்கேற்க விரும்பும் பக்தர்களுக்காக இந்த மாதம் 21-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் சிறப்பு தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது. ரூ.5 ஆயிரம் செலுத்தி டிக்கட்டை பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட்டை பெற்றுக் கொள்ளும் பக்தர்கள் 4 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவ விழா மற்றும் பூஜையில் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் பக்தர்கள் ஏழுமலையானை 3 நாட்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் நேரடியாக தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.
தரிசன டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் காலை 7 மணிக்கு பாரம்பரிய உடை அணிந்து வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் வந்து அடையாள அட்டையை காண்பித்து தரிசனத்தில் கலந்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.