

இந்திய கிரிக்கெட் உலகில், தற்போது அதிகம் பேசப்படும் பெயராக 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி உருவெடுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் அதிவேக சதம் அடித்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார், பீகாரை சேர்ந்த இந்த இளம் கிரிக்கெட் விளையாட்டு வீரர்.
இந்த நிலையில் இவரை, இந்திய டெஸ்ட் அணியில் சேர்ப்பது குறித்த விவாதங்கள் தற்போது எழுந்துள்ளன. பிசிசிஐ இவரை ஒரு தொடக்க வீரராக அல்லாமல், நடுத்தர வரிசையில் களமிறக்கி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
கடந்த 1989-ஆம் ஆண்டு, 16 வயதே ஆன சச்சின் டெண்டுல்கரை பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் முதன்முதலாக பிசிசிஐ களமிறக்கியது. அந்த ஒரு முடிவு இந்திய கிரிக்கெட் வரலாற்றையே மாற்றியமைத்தது. அதை போன்றதொரு வரலாறு தற்போது வைபவ் விஷயத்திலும் பிசிசிஐ எடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வைபவ் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் என்பது அணிக்கு கூடுதல் பலமாகும். இருப்பினும், அவரை நேரடியாகத் தொடக்க வீரராகக் களமிறக்கி அதிக அழுத்தத்தைக் கொடுப்பதை விட, சச்சினைப் போலவே மிடில் ஆர்டரில் களம் காணச் செய்வது அவரது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
ஐபிஎல் ஏலத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இவரை, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நீண்ட கால முதலீடாக பிசிசிஐ பார்க்கிறது. இந்த இளம் வீரர் இந்திய அணியின் அடுத்த 'ரன் மெஷினாக' மாறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.