கூட்டணி கட்சியினர் காலை வாரியதால் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை- அ.தி.மு.க. மீது ராமதாஸ் சாடல்

வட தமிழகத்தில் தடுக்கி விழுந்தால், வன்னியர்கள் மீதுதான் விழ வேண்டும். அப்படி இருக்கும் நிலையில், நாம் ஆட்சியை கைப்பற்றி இருக்க வேண்டும் என ராமதாஸ் பேசியுள்ளார்.
கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசிய காட்சி
கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசிய காட்சி
Published on

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் சேலம் இரும்பாலை ரோட்டில் ஆர்.கே.வி.திருமண மண்டபத்தில் நடந்தது.

மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாநில தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் சதாசிவம் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

நான் உங்களுக்காக பொது வாழ்க்கைக்கு வந்து 42 ஆண்டுகள் ஆகிறது. நான் உங்களை சரியாக வழிகாட்டவில்லையா? என்ன தவறு செய்தேன்?

370 சாதியினரும் பயன்பெற போராடி இட ஒதுக்கீடு வாங்கினோம். கிடைத்த இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் கிடைக்கத்தான் பாடுபட்டேன். வட தமிழகத்தில் தடுக்கி விழுந்தால், வன்னியர் மீதுதான் விழ வேண்டும். அப்படி இருக்கும் நிலையில், நாம் ஆட்சியை கைப்பற்றி இருக்க வேண்டும். வன்னியர் மட்டும் 2 கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களை நம்பி தானே கட்சியை ஆரம்பித்தேன்.

தொடர் போராட்டத்தால் வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் பிற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் தற்போது இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தடை ஆணை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

தமிழகத்தில் 2 கோடி வன்னிய சமுதாய மக்கள் உள்ளனர். அவர்களை நம்பி தானே கட்சியை ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் தனியாக போட்டியிட்டு 4 எம்.எல்.ஏ. சீட் வென்றோம். அப்படியே தொடர்ந்து தனித்து போட்டியிட்டு இருந்தால் ஆட்சியை கைப்பற்றி இருக்கலாம். ஆனால், சிலர் கூறியதன் பேரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோற்றோம். தேர்தலில் கூட்டணி என்றாலே காலை வாருவதாக இருக்கிறது. கூட்டணி தர்மமெல்லாம் அதர்மமாகிவிட்டது. கடந்த தேர்தலில் 23 தொகுதியில் போட்டியிட்ட நிலையில், குறைந்தது 15 தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் 9 மாவட்டங்களில் மட்டும் பெரும்பான்மையாக உள்ள ஒக்கலிக கவுடர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 40 முதல் 50 பேர் எம்.எல்.ஏ.க்களாக இருக்கிறார்கள். அங்கு யார் மெஜாரிட்டியாக வருகிறார்களோ அவர்களுக்கு குமாரசாமி ஆதரவு தெரிவித்து முதல்-அமைச்சராக பதவி வகித்து வந்துள்ளார். நீங்கள் ஒன்று சேர்ந்து பா.ம.க.விற்கு ஆதரவு அளித்திருந்தால், இங்கும் அதுபோல் நடந்திருக்கும்.

ஆனால் தமிழகத்தில் நாம் ஒரு சீட், 2 சீட் என்று பிற கட்சிகளிடம் கெஞ்சுகிறோம். வன்னியர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் 70 எம்.எல்.ஏ.க்கள் வரை வந்திருக்க முடியும். ஆனால் அப்படி இல்லை. பணம் மற்றும் பதவிக்காக யாரும் விலை போகக்கூடாது.

வன்னியர்களின் முன்னேற்றம், உரிமை, வேலைவாய்ப்பு போன்றவைக்காக ஒற்றுமையுடன் இருந்து பாடுபட வேண்டும். இந்த ராமதாசை விட்டு விட்டால், இன்னொரு ராமதாஸ் பிறக்கமாட்டார். அதனால், முடிவெடுக்க வேண்டிய இடத்தில் நீங்கள் தான் இருக்கிறீர்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் பா.ம.க.வினர் போட்டியிட்டு நீங்கள் யார்? என்பதை அடையாளம் காட்ட வேண்டும். அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நல்ல செய்தி முதன் முதலில் சேலம் மாவட்டத்தில் இருந்து எனக்கு வர வேண்டும். அதை நிறைவேற்ற உங்களது பயணத்தை இப்போதே தொடங்க வேண்டும்.

பணம் முக்கியம் இல்லை, மானம் தான் முக்கியம் என்று பயணிக்க வேண்டும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் ஒருதுளி சாராயம் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். பட்டி தொட்டி எல்லாம் இன்பம் பொங்கும். அன்புமணி கூறியதுபோல் மாற்றம், முன்னேற்றம் என்ற வார்த்தைகளை எதிர்காலத்தில் ஓங்கி ஒலிக்க செய்ய வேண்டும்.

எந்த கட்சியில் வன்னியர்கள் இருந்தாலும், ஓட்டு மட்டும் மாம்பழத்திற்கு போட வேண்டும். அப்படி செய்தால் 70 முதல் 80 எம்.எல்.ஏ. வரமுடியும். பிறகு மற்ற சமூகத்தினரும் ஏற்றுக்கொள்வார்கள். அத்தகைய நிலையை உருவாக்க வேண்டும். மாற்றம், முன்னேற்றத்திற்கு ஆதரவு தர வேண்டும். அன்புமணி ராமதாஸ், ஒரே ஒருமுறை வாய்ப்பு கேட்டார். அதனால், இனியாவது மாற்றத்தை கொண்டுவாருங்கள். இப்போது ஒன்று திரண்டிருப்பதை விட்டுவிடக்கூடாது. ஒரே ஒரு முறை அன்புமணிக்கு ஆதரவு அளியுங்கள். வரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் யாரை அடையாளம் காட்டுகிறோமோ, அவர்களுக்கு திண்ணை பிரசாரம் செய்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com