

ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் 250 பஸ்கள் அதிகாலை 2.30 மணிவரை இயக்கப்பட்டது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செஞ்சி, திருக்கோவிலூர், ஆரணி, வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதையடுத்து வருகிற 9-ந் தேதி நடைபெறும் 2-வது கட்ட தேர்தலுக்கும் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சிறப்பு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இன்று நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க வசதியாக கோயம்பேட்டில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 250 பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 2.30 மணிவரை மக்கள் அதிகளவு வந்ததால் அவர்களுக்கு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதை கருத்தில் கொண்டு கூடுதலாக பஸ்களை இயக்க தயாராகி வருகிறோம்.