தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய 5 பேர் கைது

தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய 5 பேர் கைது
Published on

சென்னை:

சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 13-ந் தேதி அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் போலீஸ் நிலையம் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றது.

போலீஸ் நிலைய வாசலில் பெட்ரோல் குண்டு தீப்பிடித்து எரிந்தது.

அப்போது போலீஸ் நிலையத்துக்குள் பூமிநாதன் என்ற போலீஸ்காரர் மட்டும் பாதுகாப்பு பணியில் இருந்தார். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட போது போலீஸ் நிலையம் அருகில் ஒருவர் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை பார்த்து அவர் கூச்சல் போட்டார். உடனே போலீஸ்கரர் பூமிநாதன் வெளியே ஓடி வந்தார். குண்டு வீச்சில் பிடித்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தார்.

போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் கமி‌ஷனர் ஏ. கே. விஸ்வநாதன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

பெட்ரோல் குண்டு வீசியவர்களை பிடிக்க தனிபடை அமைக்கப்பட்டது. சென்னை முழுவதும் தெடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள 3 கண்காணிப்பு கேமராக்களில் 2 கேமராவில் குண்டு வீசியவர்களின் உருவம் பதிவாகி இருந்தது.

இருட்டு நேரம் என்பதால் அது தெளிவாக தெரியவில்லை. போலீஸ் நிலையம் அருகில் போஸ்டர் ஒட்டியவரிடமும் விசாரிக்கப்பட்டது. குற்றவாளிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களின் நம்பர்களை கண்டறிந்து குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினர்.

அதன் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டறிந்தனர். நேற்று நள்ளிரவு பெசன்ட் நகர் பகுதியில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று வினோத், மணி உள்பட 5 பேரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களை வடபழனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். இன்று காலை அவர்களை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு வைத்தும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com