நெல்லையில் 8-ந்தேதி விஜய் பிரசாரம் - இடங்களை தேர்வு செய்வதில் நிர்வாகிகள் மும்முரம்

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தென்மாவட்டங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டமிட்டுள்ளார்.
நெல்லையில் 8-ந்தேதி விஜய் பிரசாரம் - இடங்களை தேர்வு செய்வதில் நிர்வாகிகள் மும்முரம்
Published on

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தனித்து போட்டியிடும் நிலையில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பயணத்தை தொடங்கி உள்ளார். அந்த வகையில் சென்னை பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தை விஜய் தொடங்கினார்.

தொடர்ந்து திருச்சியில் பிரசாரத்தை முடித்துள்ள விஜய் தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து முடித்துள்ளார். தொடர்ந்து அவர் தென்மாவட்டங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டமிட்டுள்ளார்.

அதன்படி வருகிற 8-ந்தேதி விஜய் நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட தொடங்கி உள்ளனர்.

இதுதொடர்பாக கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், நெல்லையில் 7 அல்லது 8-ந்தேதியில் தலைவர் விஜய் பிரசாரம் செய்வார். இதற்காக கட்சி தலைமையில் இருந்து 3 இடங்களை தேர்வு செய்து அதில் ஒன்றை உறுதிபடுத்திட அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி நெல்லை-குமரி நான்குவழிச்சாலையில் கங்கைகொண்டான் சிப்காட் அருகில், பாளை ராஜகோபாலபுரம் அருகில் சிவந்திபட்டி செல்லும் சாலை, சுத்தமல்லி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மேற்கு புறவழிச்சாலை என 3 இடங்களை தேர்வு செய்துள்ளோம்.

ஆனால் குறைந்தபட்சம் 30 ஏக்கர் வரை இடம் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போது தான் ஆயிரக்கணக்கான வாகனங்களை சிரமமின்றி நிறுத்த முடியும். நெல்லையில் பிரசாரம் நடக்கும் பட்சத்தில் தென்மாவட்டங்களை சேர்ந்த அதாவது மதுரைக்கு தெற்கே குமரி வரையிலும் உள்ள மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் ஒரே மேடையில் வைத்து விஜய் பிரசாரம் செய்ய வாய்ப்பு உள்ளது என்றனர்.

இதுதொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், பொதுவாக தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு வருவது தொடர்பாக அனுமதி கேட்டு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டரிடம் கடிதம் வழங்குவார்கள். அதனை தொடர்ந்து எங்களிடம் நோ அப்ஜெக்சன் சான்றிதழுக்காக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கடிதம் பரிந்துரைக்கப்படும். ஆனால் இதுவரை விஜய் பிரசாரம் தொடர்பாக எந்தவித அனுமதியும் கேட்டு அக்கட்சியின் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளிக்கவில்லை என்றனர்.

அதேநேரம் இன்று அல்லது நாளை விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கவும், இடங்களை உறுதி செய்யவும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. விஜய் வருகை தகவலால் தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com