

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது.
தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. இதனால் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவித்தபடி வருகிற 8-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. மாணவ-மாணவிகளும் தேர்வு முடிவுகளை அறிய எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியீடு சற்று தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத்துறை சார்ந்த சில அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு முடிக்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. எனினும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதலை பெறவேண்டும். இதனால் திட்டமிட்டபடி வருகிற 8-ந்தேதி பிளஸ்-2 முடிவுகளை வெளியிட முடியாது. புதிய அரசு அமைந்ததும், உரிய ஒப்புதல் பெற்று தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றனர்.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை பள்ளிக்கல்வித் துறையோ அல்லது தேர்வுத் துறையோ வெளியிடவும் பெற்றோரும், மாணவ-மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.