

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் எழிலரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,
“ஜெயலலிதாவை திமுக கைது செய்ததாக ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். நீதிமன்ற உத்தரவின் பேரில் தான் அன்று கண்ணியமான முறையில் கைது செய்யப்பட்டார்களே தவிர இரவில் சென்று கதவை உடைத்தெல்லாம் கைது செய்யப்படவில்லை. 2014 இல் நீதிமன்றம் சென்ற ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது யார் ஆட்சி இருந்தது?
காங்கிரஸ் ஆட்சி தான் கைது செய்தது என ஆதவ் அர்ஜூனா சொல்வாறா? செங்கோட்டையன் சொல்வாறா? அப்படி ஜெயலலிதாவை கைது செய்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துள்ளார்களே அந்த கூட்டணியை முறித்துக்கொண்டு போவார்களா?
இல்லை ஜெயலலிதா அவர்களை கைது செய்த காங்கிரஸ் உடன் அமைச்சரவையில் இருக்க முடியாது என செங்கோட்டையன் பதவியை ராஜினாமா செய்வாரா? இப்போது அதிமுகவை குதிரை பேரம் மூலம் இழுத்து அழிக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறது ஷோபா மாடல் அரசு.
கரூர் சம்பவத்தில் காவல்துறையை வைத்து கொலை செய்தார்கள் என குற்றம் சாட்டினாரே ஆதவ் அர்ஜூனா இப்போது காவல்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. முதலமைச்சர் விஜய் என்ன செய்கிறார்? உலகத்திலேயே இறந்தவர்கள் வீட்டுக்கு போகாமல் அவர்களை வரவைத்து ஆறுதல் சொன்னது இவர்கள் தான்.
இப்போது கரூர் போவதாக சொல்வது எல்லாம் இடைத்தேர்தலுக்கான நாடகம். கரூர் சம்பவம் நடந்த 278 நாளாகிறது. முதலமைச்சராகி 55 நாட்களாக போகவில்லை. இப்போது இடைத்தேர்தல் வர இருப்பதால் அதற்காக கரூர் செல்கிறார்.
விஜய் காலதாமதமா வந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் இறந்தனர் என்பது அங்குள்ள மக்களுக்கு நன்கு தெரியும் அதனால் தான் கரூரில் தவெக தோற்றது. இப்போது காவல்துறை மீது ஆதவ் அர்ஜூனா வைக்கும் குற்றச்சாட்டுக்கு இதுவரை டிஜிபி, உள்துறை செயலாளர் பதில் அளிக்கவில்லை. அவர்களின் விளக்கம் என்ன?
வெறும் அவதூறுகளை மட்டுமே பேசி ஒரு ஆட்சி நடந்து கொண்டுள்ளது. தினம் தினம் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. நேற்று ஒரு 5 வயது சிறுவனையும் அவனது தந்தையையும் பட்ட பகலில் தலையை வெட்டி கொன்றிருக்கிறார்கள். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை எந்த பதிலும் இல்லை.
ஆணவக்கொலை பற்றி பேசவில்லை, திமுக எதிரித்து தீர்மானம் போட்ட ஒன்றிய அரசின் புதிய விபி-ஜி ராம்ஜி 100 நாள் வேலை திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால் 5000 கோடி இழப்பு நமக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அரசு தான் இப்படி என்றால் அதன் கூட்டணியில் இருக்கிறவர்களாவது பேசுகிறார்களா.? ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வருகிறது அது பற்றி பேசவில்லை. கூட்டணியில் இருக்கும் முஸ்லீம் லீக்கும் பேசவில்லை. காங்கிரஸ் பற்றி யாராவது பேசினால் தாங்க மாட்டீங்கனு டயலாக் பேசுகிறார்கள். அண்ணா 1967 இல் அடித்த ஒரு அடியில் நாக் அவுட் ஆனவர்கள் காங்கிரஸ். நாங்கள்தான் காப்பாற்றி ஐசியுவில் வைத்து காப்பற்றி வந்தோம். இவர்கள் எங்களை பேசலாமா?
கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவந்த நலதிட்டங்கள் தான் இதுவரை நடைமுறையில் உள்ளது. தவெக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் முறையாக செயல்படுத்தவில்லை. மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சியாக திமுக உள்ளது.
வர உள்ள இடைத்தேர்தலை சந்திக்க திராணி இல்லாமல் தோல்வி பயத்தில், பதட்டத்தில் பொய் வழக்கு, அவதூறு செய்வது என இறங்கி உள்ளனர். வெறுப்பு அரசியலை , அவதூறு அரசியலையும் தமிழ்நாட்டில் செய்து வருகின்றனர். இதை அனைத்தையும் திமுக முறியடிக்கும். மக்கள் பிரச்சனைக்காக களத்தில் நின்று போராடும்.” என தெரிவித்தார்.