6 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்?- தமிழகம் முழுவதும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

புதிய ரேஷன் கார்டு கேட்டு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வரும் நிலையில் தேர்தலுக்காக மார்ச் 31-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டது.
ரேஷன்  கார்டு
Published on

தமிழகம் முழுவதும் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் 34,911 ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், மற்றும் துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.

நிறுத்தி வைப்பு

தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சத்து 41,335 குடும்ப அட்டைகள் தற்போது உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 7 கோடி பேர் பயன் அடைந்து வருகிறார்கள். ரேஷன் கார்டு என்பது ஒவ்வொரு மக்களின் அடிப்படை உரிமையாக கருதப்படுவதால் திருமணம் ஆன உடனேயே முதலில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

ரேஷன் கார்டுகள் மூலமே அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுவதால் அதனை வாங்குவதில் தீவிரமாக உள்ளனர். இலவச வேட்டி-சேலை முதல் பொங்கல் பரிசு, இது தவிர சிறப்பு திட்டத்தொகை போன்றவை இதனை அடிப்படையாக வைத்து வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி முதல் புதிய ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. புதிய ரேஷன் கார்டு கேட்டு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வரும் நிலையில் தேர்தலுக்காக மார்ச் 31-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டது.

3 லட்சம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் ன்னும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

கடந்த 6 மாதமாக புதிய ரேஷன் கார்டு கிடைக்காமல் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். மார்ச் மாதம் வரை சுமார் 3 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதில் 21,000 மனுக்கள் தவிர மற்ற அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிசீலனையில் உள்ளன.

ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களிலும் மேலும் சுமார் 3 லட்சம் விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை துறைக்கு வந்து உள்ளன.

அச்சடிக்கும் பணி

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

3 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. எப்போது கொடுக்கப்படும் என்பது அரசின் முடிவாகும். சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பங்கள் தொடர்ந்து வருகின்றன. ஏப்ரல்,மே, ஜூன் 3 மாதங்களில் விண்ணப்பித்த படிவங்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. புதிய ரேஷன் கார்டு வழங்குவது குறித்து 7 வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒரே எண் கொண்ட வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தால் புதிய கார்டு வழங்குவது சிரமம்.

இதனால் புதிய ரேஷன் கார்டுகள் குறித்த ஆய்வு விசாரணை முழுமையாக மேற்கொண்டு அதனை முறைப்படுத்தினால் மட்டுமே அனுமதிக்கப்படும். அதனால் தாமதம் ஏற்படுகிறது.

தற்போது தயாராகி வரும் புதிய ரேஷன் கார்டுகளை முதலமைச்சர் விஜய் வழங்குவாரா அல்லது வழக்கம்போல் அலுவலகத்திலேயே வினியோகிக்கப்படுவதா என்பது பற்றி இன்னும் தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com