அவசரம் அவசரமாக தொகுதி மறுவரையறையை கொண்டு வரத் தேவை என்ன?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நாங்கள் முழுமனதோடு ஆதரிக்கிறோம்.
அவசரம் அவசரமாக தொகுதி மறுவரையறையை கொண்டு வரத் தேவை என்ன?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
Published on

நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை உயர்த்தும் விவகரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான NDA அரசு நாடாளுமன்றத்தின் அடிப்படை அமைப்பையே திட்டமிட்டுச் சீர்குலைக்கிறது. விவாதங்களுக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் பதில் கூறுவதற்குமான தளமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றமானது, உறுப்பினர்கள் தங்கள் தொகுதி, மாநில மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்குக் கூட போதிய நேரமளிக்காத வெற்றுச் சம்பிராதய அவையாகச் சுருக்கப்பட்டு வருகிறது.

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான முன்மொழிவு, “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்” என்ற அவர்களின் சொந்த முழக்கத்துக்கே எதிரானதாக அமைந்துள்ளது. இந்த முடிவினால் செலவுதான் கூடும், மக்களின் வரிப்பணம் வீணாகும், நாடாளுமன்றச் செயல்பாடுகளின் தரம் குறையும்.

மேலும், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியமாக வரையறுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1-க்கும் இது எதிரானது. மாநிலங்களின் குரலைப் புறக்கணித்துவிட்டு, முறையான கலந்தாலோசனையும் செய்யாமல் தவிர்த்துவிட்டுச் செயல்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது. இது இந்தியாவின் பன்முக, கூட்டாட்சித் தன்மையைச் சிறுமைப்படுத்தும் ஒற்றைத்துவ எல்லைமீறலாகும்.

இதற்கெல்லாம் மேலாக, இந்தத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையானது பா.ஜ.க. ஆதிக்கம் செலுத்தும் வட மாநிலங்களுக்கு ஆதரவாக வலுவூட்டி, தென்மாநிலங்களின் குரலை நெரிக்கும். மூத்த தலைவர் திரு. சித்தராமையா அவர்கள் சீற்றத்தோடு கூறியதுபோல, இது நடுநிலையான நடவடிக்கை அல்ல, இது அரசியல் நோக்கம் கொண்ட திட்டமிட்ட கட்டமைப்பு மாற்றம். வட மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை இருமடங்காகும் அதேவேளையில் தென்மாநிலங்களின் அளவு 24 விழுக்காட்டிலேயே தேங்கி நிற்கிறது. இது மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களைத் தண்டிப்பதாகும்.

இந்த நடவடிக்கையால் கூட்டாட்சி சிதைக்கப்பட்டு, அதிகாரம் ஒருசில பகுதிகளில் மட்டுமே குவிக்கப்படும் என்று திரு. சித்தராமையா, திரு. பினராயி விஜயன் மற்றும் திரு. ரேவந்த் ரெட்டி ஆகிய தென் மாநில முதலமைச்சர்கள் மிகச்சரியாக எச்சரித்துள்ளனர்.

இது அவசரகதியில் தற்போது செய்யப்படுவதும் நம் அச்சத்தை அதிகமாக்குகிறது. பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும் இத்தகைய முக்கிய நடவடிக்கையை மாநிலத் தேர்தல்களுக்கிடையே திணிக்க வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் சார்ந்த கதையாடல்களை வடிவமைக்கவும், பெண் வாக்காளர்களிடம் செல்வாக்கு பெறுவதற்காகவும் 2024 நாடாளுமன்ற மக்களைவைப் பொதுத்தேர்தலின்போது செய்த முந்தைய முயற்சிகளைப் போலவே இதுவும் அமைந்துள்ளது.

பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நாங்கள் முழுமனதோடு ஆதரிக்கிறோம். அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. ஆனால், பொறுப்போடு செயல்பட்ட மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே, அதை நடமுறைப்படுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் கோருகிறோம். அவர்களின் நோக்கம் உண்மையானதாக இருந்தால், இப்போதுள்ள தொகுதி அளவிலேயே மகளிருக்கான 33 இட ஒதுக்கீட்டை வழங்குவதை எதுவும் தடுக்கவில்லையே?

இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கு ஆதரவான சமூகநீதிக் காவலர் என்று ஒன்றிய அரசு தங்களை அழைத்துக்கொள்வதும் வெற்று முழக்கம்தான். ‘வளர்ந்த இந்தியா’ என ஒருபுறம் சொல்லிக்கொண்டே பல ஆண்டுகளாகக் கிரீமி லேயர் உச்சவரம்பை 8 லட்சம் ரூபாயில் இருந்து மாற்றாமல் வைத்திருந்து ஓ.பி.சி. மக்களுக்கு அவர்களுக்குரிய பங்கீடு கிடைக்காமல் வஞ்சித்தார்கள்.

இதர பிற்படுத்தப்பட்ட மகளிரின் பிரதிநிதித்துவத்துக்கான எந்தவித உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் முதல்முறையாக நாம் அறியவுள்ள சாதிவாரி எண்ணிக்கை முடிவுகளைக் கூட பரிசீலிக்காமல் அவசரமாக அவர்கள் செயல்படுவது இதில் அவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதை அம்பலப்படுத்துகிறது. இது அதிகாரமளித்தல் அல்ல, புறக்கணிப்புக்கு மாறுவேடம் போட்டுச் சீர்திருத்தம் என்கிறார்கள்.

மேலும், தொகுதி மறுவரையறைக்கான அடிப்படையாகக் கொள்ளப்போவது எது என்பதிலும் கொஞ்சம் கூட வெளிப்படைத்தன்மை இல்லை. 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப் போகிறார்களா அல்லது மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முந்தைய காலமான 1971-ஆம் ஆண்டு எண்ணிக்கையின் அடிப்படையில் செய்யப் போகிறார்களா? மாற்றி மாற்றிப் பேசுவதும், வெற்று உத்தரவாதங்களும் நம் ஐயத்தை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன.

மொத்தத்தில் இந்த நடவடிக்கை மாநிலங்களின் மீது பெரும் நிதிச்சுமையை ஏற்றும், சட்டமன்றங்களை விரிவாக்கம் செய்ய அல்லது புதிதாகக் கட்டும் நிலைக்குத் தள்ளும். இவை அனைத்தும் முறையான கலந்தாலோசனை எதுவுமின்றி நடக்க இருக்கிறது. இது கூட்டுறவுக் கூட்டாட்சியியல் மீதான நேரடித் தாக்குதல் ஆகும்.

இவர்கள் செய்ய நினைப்பது சீர்திருத்தமே அல்ல, இது அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்து, நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தி, தென்னகத்தை விளிம்புநிலைக்குத் தள்ளி, சமூகநீதியைச் சிறுமைப்படுத்துவதற்கான தன்னிச்சையான அரசியல் சதித் திட்டம்!

ஏன் இந்த அவசியமற்ற அவசரம்? ஏன் மாற்றி மாற்றிப் பேசுகிறீர்கள்? இதனால் உண்மையாகப் பயனடையப் போவது யார்? எனும் கேள்விகளுக்கு நாட்டு மக்கள் முறையான விளக்கத்தைக் கோருகிறார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com