

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் கைதைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் எழிலரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதும், மக்களுடைய தேவைகள் பூர்த்தியாகாமல் அவதிக்குள்ளாகி வருவதும், மின்வெட்டு பிரச்சனைகள் இருப்பதும், பாலியல் வன்முறைகள், கொலை கொள்ளை, ஆணவக் கொலைகள் அதிகரித்துக் கொண்டு இருக்கும் சூழல் நிலவுகிறது.
தமிழ்நாட்டில் சட்டம்,ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மின்வெட்டு, ஆணவக்கொலைகள், கொலை, கொள்ளை என நாளுக்கு நாள் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இதனை திசைதிருப்ப இன்று அனிதா ராதாகிருஷ்ணன் கைதை அரசு நடத்தியுள்ளது.
அராஜக ஆட்சியை வைத்து எதிர்கட்சிகளை முடக்கிவிடலாம் என முதலமைச்சர் விஜய் நினைக்கிறார். ஸ்ரீ வைகுண்டத்தில் ஒரு பெண் தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை செய்யபடுகிறார், குற்றவாளிகளுக்கு ஆதரவாக தவெக எம்.எல்.ஏ செயல்பட்டு அந்த பெண்ணை மிரட்டுவதாக அவர் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆனால் ஒரு சாதாரணமான விஷயத்திற்கு உடனடியாக முன்னாள் அமைச்சரை கைது செய்கிறார்கள். அதேபோல முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இடைத்தேர்தல் தோல்வி பயம் தான்.
இப்போது மணல் கொள்ளையை யாரை வைத்து செய்வது என அவர்கள் திட்டம் போடுவதாக தகவல் வருகிறது. அரசு சொல்லியதன் பேரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அணு கனிமம் சுரங்க காலத்தை நீட்டிப்பு செய்துள்ளனர். இதை பற்றி எல்லாம் கேள்வி கேட்டால் அதை திசை திருப்புதல் மட்டுமே செய்கிறார்கள், எந்த பதிலும் அளிப்பது இல்லை.
107 இடங்களில் தவெக வென்றது. ஆட்சி அமைக்க மெஜாரிட்டி இல்லாததால் அதிமுக வுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதிமுக எம். எல். ஏ லீமா ரோஸ் அதிமுக - தவெக பேச்சு வார்த்தை நடக்கிறது எனக்கூறினார். ஆனால் ஆட்சியமைத்த பிறகு அனைத்து தலைவர்களையும் நேரில் சந்தித்த முதல்வர் விஜய், இபிஎஸை சந்திக்கவில்லை.
குதிரை பேரத்தை முதலில் தொடங்கி வைத்தவர் யார் என்றால் இன்றைய முதலமைச்சர் விஜய்தான். அவர் சந்திக்க போகும் போதெல்லாம் ஒரு ஷோபா அவருடனே செல்லும். சந்திப்பு முடிந்து வரும் போது ஷோபா அங்கேயே இருக்கும்.
பாஜகவின் வாஷிங் மெஷின் முறையை இவர்களும் பின்பற்றுகின்றனர். கல்லாபெட்டி கூட்டணி என விமர்சித்து விட்டு இன்று அவர்களை சேர்த்துக்கொண்டு ஷோபா மாடல் ஆட்சி நடத்துகிறார் விஜய்.” என தெரிவித்தார்.