‘நாங்கள் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் இல்லை’ - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'- என வள்ளுவர் சொன்னதுதான் எங்கள் வழி.
‘நாங்கள் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் இல்லை’ - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது உரையின் இறுதியில் மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார்.

இதற்கு பாஜக மற்றும் பல தரப்பிலிருந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த விமர்சனங்கள் தொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,

“தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசியபோது, “மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டேன். இதற்காக சிலர் என்னை விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் கிடையாது. எதிர்ப்பிலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில், ஒரு சிறிய விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புகிறேன்.

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றுக்கூறினால் யாரும் கோயிலுக்கு போகக் கூடாது என்று அர்த்தம் இல்லை.

கோயிலில் மட்டுமல்ல, சமூகத்திலும் அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்று அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதி என மக்களை பிரிப்பதைதான் ஒழிக்கவேண்டும் என்றுக் கூறினேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கருணாநிதி பேசிய கொள்கையைத்தான் நானும் பேசினேன்.

நாங்கள் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும், எதிரானவர்கள் இல்லை. ஆனால் சமத்துவமின்மையையும், ஒடுக்குமுறையையும் கடுமையாக எதிர்ப்போம்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-என வள்ளுவர் சொன்னதுதான் எங்கள் வழி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com