விருதுநகர் வெடி விபத்து: த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்

படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் வெடி விபத்து: த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்
Published on

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலையில், இன்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.

அரசு அனுமதியுடன் இயங்கிவரும் ஆலையில் வெடிவிபத்தின்போது 30க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் அருகே, கட்டனார்பட்டியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து பூரண குணமடைய விழைகிறேன். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் மக்களுக்கான உண்மையான ஆட்சி அமைந்த உடன், பட்டாசுத் தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com