TN Assembly Election| த.வெ.க. வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடுகிறார் விஜய்

வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
TN Assembly Election| த.வெ.க. வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடுகிறார் விஜய்
Published on

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிவடைந்து விட்டது. அ.தி.மு.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியாகி விட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை மயிலாப்பூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டார்.

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

இந்த நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. த.வெ.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் கட்சி தலைவர் விஜய் ஏற்கனவே நேர்காணல் நடத்தி முடித்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த நேர்காணல் நடந்தது.

அதில் இருந்து வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுவதால் 234 தொகுதிகளுக்கும் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து ஏற்கனவே ஆவணங்கள் பெறப்பட்டன. இந்த ஆவணங்களை சரிபார்க்கும் பணிகளும் நடந்து வந்தது.

ஏற்கனவே முதல் கட்டமாக 114 பேரை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரச்சொல்லி அவர்களின் ஆவணங்களை சரிபார்த்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு வக்கீல், ஒரு தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி நியமிக்கப்பட்டு, போட்டியிட இருப்பவர்களின் ஆவணங்கள் தவறில்லாமல் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர்.

மீதமுள்ள வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி கடந்த சில நாட்களாக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் இரவு பகலாக நடந்து வந்தது. இதன் மூலம் முழுமையான வேட்பாளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியல் கட்சி தலைவர் விஜய் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த வேட்பாளர்களை விஜய் இறுதி செய்கிறார்.

இதையடுத்து நாளை தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பட்டியலை விஜய் வெளியிடுகிறார். வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாளை மறுநாள் (28-ந்தேதி) முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். பெரம்பூர் தொகுதியில் இருந்து அவரது பிரசாரம் தொடங்குகிறது.

இதற்காக அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. முறைப்படி அனுமதி கிடைத்ததும் நாளை மறுநாள் முதல் விஜய் பிரசாரத்தை தொடங்குகிறார்.

தொடர்ந்து கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம் தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு விஜய் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com