

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதையடுத்து, தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், பாமக ஆகியவற்றின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் விஜய் ஈடுபட்டுள்ளார்.
பெரும்பான்மை ஆதரவை பெற தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கு கடிதம் மூலம் ஆதரவு கோரியுள்ளதாக தகவல் வெளியாகின. இதில் த.வெ.க.வை ஆதரிக்கும் முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின்போது, ஆட்சி அமைப்பதற்கு அ.தி.மு.க.வின் ஆதரவை புஸ்ஸி ஆனந்த் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தலைமை செயலகத்தில் சட்டமன்ற செயலாளரை நேரில் சந்தித்து செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகர் தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இல்லத்திற்கு பிரபல ஜோதிடர் ரிக்கி ரதன் பண்டித் வருகை தந்துள்ளார்.
விஜய் இன்று பிற்பகல் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க கோர உள்ள நிலையில் அதற்கு முன்பாக ஜோதிடரை சந்தித்தார்.
பதவியேற்பு விழா நாள், நேரம் குறித்து பிரபல ஜோதிடருடன் தவெக தலைவர் விஜய் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.