234 வேட்பாளர்களை விஜய் நாளை அறிமுகம் செய்கிறார்- சென்னை நட்சத்திர ஓட்டலில் பிரமாண்ட விழா| TN Assembly Election

கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார்.
234 வேட்பாளர்களை விஜய் நாளை அறிமுகம் செய்கிறார்- சென்னை நட்சத்திர ஓட்டலில் பிரமாண்ட விழா| TN Assembly Election
Published on

சென்னை:

தமிழகத்தில் அடுத்த மாதம் 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் (30-ந்தேதி) தொடங்குகிறது. இதனால் சட்டசபை தேர்தல் களம் விறுவிறுப்படைந்து உள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க., தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது.

விருப்பமனு கொடுத்தவர்களிடம் கட்சி தலைவர் விஜய் நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து த.வெ.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தை ஒன்றாக நடத்த விஜய் திட்டமிட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் 234 வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் கட்சி தலைவர் விஜய் தலைமையில் நேற்று நடைபெறுவதாக இருந்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு, தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து வெளியூர்களை சேர்ந்த வேட்பாளர்கள் நேற்று முன்தினமே சென்னைக்கு வந்து விட்டனர். அவர்கள் சென்னையில் தங்கியுள்ளனர்.

வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு அனுமதி கேட்டு போலீஸ் மற்றும் தேர்தல் ஆணையத்தில் அனுமதி கோரப்பட்டது. போலீஸ் அனுமதி கிடைத்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்டு சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று நடைபெற இருந்த த.வெ.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைக்காத நிலையில் த.வெ.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நாளைக்கு (29-ந்தேதி) தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்டு செயலி மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே போலீசார் அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையமும் அனுமதி அளித்துள்ளதால் த.வெ.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் கட்சி தலைவர் விஜய் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை (29-ந் தேதி) காலை 10 மணிக்கு மிக பிரமாண்டமாக நடக்கிறது.

இந்த கூட்டத்தில் 1,000 பேர் பங்கேற்பதற்கு அனுமதி கேட்ட நிலையில் 500 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதையடுத்து இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கிறார்கள்.

இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com