

பசிபிக் பெருங்கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் படகு ஒன்றின் மீது அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியது.
ஏவுகணை மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் படகில் இருந்த 3 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஏற்கனவே கரீபியன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்ட நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 2-வது தாக்குதல் நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் லத்தீன் அமெரிக்க கடல் பகுதிகளில் டிரம்பின் நிர்வாகம் நடத்தி வரும் இந்த போதைப்பொருள் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இதுவரை 191 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்கப்பட்ட படகுகளில் போதைப்பொருள் இருந்ததா என்பதற்கான ஆதாரங்களை ராணுவம் இதுவரை வெளியிடவில்லை. இருப் பினும், அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுக்க இந்த ஆயுதப் போர் அவசியம் என்று டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டங்களை மீறி இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.