TN Assembly Election| திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை த.வெ.க. தலைவர் விஜய் ரோடு-ஷோ

காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாளை பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி நேரம் மட்டும் ரோடு-ஷோ செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.
TN Assembly Election| திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை த.வெ.க. தலைவர் விஜய் ரோடு-ஷோ
Published on

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த 2-ந்தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் அன்றைய தினம் மரக்கடை காந்தி மார்க்கெட் அருகே பிரசாரம் மேற்கொண்டார்.

அதன் பிறகு மற்ற மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். பல இடங்களில் ரோடு-ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அந்த பகுதிகளில் பிரசாரம் ரத்தானது.

இதற்கிடையே அவர் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் மீண்டும் பிரசாரம் செய்ய வருவாரா? என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் திடீரென பிரசாரம் ரத்தான நிலையில் அவர் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டதாக பரவலாக பேசப்பட்ட நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

இதற்காக திருச்சி மாநகர காவல் துறையினரிடம், அனுமதி கேட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் மனு அளித்திருந்தனர். காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாளை பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி நேரம் மட்டும் வயர்லெஸ் ரோடு, கே.கே.நகர் பஸ் நிலையம், தென்றல் நகர், காஜாமலை, ஈ.வி.ஆர். கல்லூரி, கோழிப் பண்ணை, கொட்டப்பட்டு வரை ரோடு-ஷோ செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.

எனவே திட்டமிட்டபடி த.வெ.க. தலைவர் விஜய் நாளை திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். அவரது பிரசாரத்தை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இரவு 8 மணி முதல் 10 மணி வரை பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு பிரசாரத்திற்காக விஜய் வருகை தர உள்ளது தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com