

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சட்டசபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதை தொடர்ந்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பூர் தொகுதியில் திறந்த வேனில் சென்றபடி பிரசாரம் செய்து விசில் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
இந்த நிலையில் விஜய் நேற்று மாலை திடீரென்று தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதிக்கு சென்றார். பெரம்பூரில் த.வெ.க. சார்பில் தேர்தல் பணிமனை திறக்கப்பட்டு உள்ளது. அந்த தேர்தல் பணிமனைக்கு விஜய் சென்றார்.
அப்போது தேர்தல் பணிமனையில் த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பெண் நிர்வாகிகள் பலர் இருந்தனர். விஜய்யை பார்த்ததும் அங்கிருந்த பெண்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
விஜய் சிறிதுநேரம் பணி மனையை சுற்றி பார்த்தார். பின்னர் அங்கு இருந்த பெண்களுடன் விசில் கோலம் வரைந்தார்.
தேர்தல் பணிமனைக்கு விஜய் வந்திருக்கும் தகவல் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு பரவியது. இதை அறிந்ததும் அந்த பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் விஜய்யை பார்க்க ஆர்வமுடன் திரண்டு வந்தனர். விஜய்யை நேரில் கண்டதும் குழந்தைகள் பலர் விசில் ஊதி ஆரவாரம் செய்து உற்சாகம் அடைந்தனர்.
அதனை தொடர்ந்து விஜய் அருகில் உள்ள வீடுகளுக்கு சென்றார். ஒவ்வொரு வீடாக சென்ற அவர் அந்தந்த குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். வீட்டுக்குள் நுழைந்ததும் அங்குள்ள பெண்கள் முதலில் விஜய்க்கு தண்ணீர் கொடுத்து உபசரித்தனர். அந்த தண்ணீரை வாங்கி விஜய் பருகினார். அப்போது விஜய்க்கு பெண் ஒருவர் விபூதி பூசி தேர்தலில் வெற்றி பெறுவீர்கள் என்று வாழ்த்தினார்.
தொடர்ந்து அடுத்தடுத்த வீடுகளில் உள்ள குழந்தைகளுடன் அமர்ந்து விஜய் பேசி மகிழ்ந்தார். பின்னர் பொதுமக்களிடம் விசில் சின்னத்தில் மறக்காமல் வாக்களியுங்கள் என்று கூறினார். அதன் பிறகு விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பெரம்பூர் பகுதியில் உள்ள வீடுகளில் விஜய் திடீரென்று விசிட் அடித்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது.