

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. புதிய வரவான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
தமிழக கவர்னர் அர்லேகரை சந்தித்து, விஜய் நேற்று மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அவர், த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்கினார்.
ஆனால் அதை பெற்றுக்கொண்ட கவர்னர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால் தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதற்கிடையே தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநரை இன்று மீண்டும் சந்தித்தார்.
அப்போது, 113 பேரின் ஆதரவு இருப்பதாக விஜய் கூறி உள்ள நிலையில் பெரும்பான்மை குறித்து கேட்டுள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான 118 பேரின் ஆதரவு குறித்து ஆளுநர் சில விளக்கங்களை கேட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, தவெக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என மற்ற கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜயிடம் ஆளுநர் கூறியது என்ன? என்பது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில்,
ஆட்சியமைக்க தேவையான அளவு பெரும்பான்மை தவெகவுக்கு இல்லை. ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இருப்பதை தவெக தலைவர் விஜய் நிறுவவில்லை.
தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை தேவை என ஆளுநர் அர்லேகர் விஜயிடம் கூறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமெனில் தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.