

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அவருக்கு வேலும் வழங்கப்பட்டது. அந்த வேலுடன் விஜய் முருகனை தரிசிக்க கோவிலுக்குள் சென்றார்.
அதிகாலையில் கோவில் நடை திறந்தபிறகு நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் விஜய் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அவர் வழிபட்டார். பின்னர் சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, பெருமாள் சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார்.
அதன்பிறகு சூரசம்ஹார மூர்த்தி சன்னதிக்கும் சென்று வழிபட்டார். தரிசனம் முடிந்ததும் தூத்துக்குடி விமான நிலையம் சென்ற விஜய் அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை திரும்பினார்.
திருச்செந்தூரை தொடர்ந்து விஜய் இன்று மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய திட்டமிட்டார். இதற்காக விஜய் இன்று காலை 10 மணிக்கு சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் சென்னை விமான நிலையம் சென்றார்.
பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் சென்றார். அதன் பிறகு அங்கிருந்து அவர் காரில் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். விஜயை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
விஜய்யுடன் த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்தும் சீரடி சென்றார். தரிசனம் முடிந்ததும் விஜய் இன்று மாலையே சென்னை திரும்ப திட்டமிட்டு உள்ளார்.
அடுத்தடுத்த நாட்களில் விஜய் பிரசித்தி பெற்ற மேலும் சில கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் களத்தில் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும் விஜய், தனது தேர்தல் வெற்றிக்காகவும், கட்சி ரீதியான தடைகளை கடப்பதற்காகவும் இந்த தொடர் ஆன்மீக பயணங்களை மேற்கொண்டு வருவதாக கருதப்படுகிறது.
சாய்பாபா வழிபாடு என்பது மதங்களை கடந்து அனைவராலும் பின்பற்றப்படும் ஒன்றாக உள்ளது. குறிப்பாக, மன அமைதி மற்றும் காரியத்தின் வெற்றிக்காக வேண்டிக்கொள்ளும் இடமாக சீரடி விளங்குகிறது. கடந்த காலங்களில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்வின் முக்கிய முடிவுகளுக்கு முன்பாக சீரடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
விஜய்யை பொறுத்தவரை, அவர் தனது அரசியல் கட்சி பணிகளை தொடங்கியதில் இருந்தே மிகவும் திட்டமிட்டு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற 4-ந்தேதி வெளியாக உள்ள முடிவுகள் அவரது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது.
இந்த சூழலில், விஜய் சீரடி சாய்பாபாவை தரிசனம் செய்வது அவரது தனிப்பட்ட நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. விஜய்யின் அடுத்தடுத்த ஆன்மீக பயணங்கள் அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாகி உள்ளது.