

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி அவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாளை பிரசாரம் செய்வதற்காக அவரது கட்சி நிர்வாகிகள் போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அனுப்பி உள்ளனர்.
அதில், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கடலூர் வேட்பாளரை ஆதரித்து, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், வடலூரில் குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், சேத்தியாத்தோப்பில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் வேட்பாளர்களை ஆதரித்து மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், திட்டக்குடியில் விருத்தாசலம், திட்டக்குடி வேட்பாளர்களை ஆதரித்து மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் பிரசாரம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு மீது பரிசீலனை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடலூரில் நாளை விஜய் பிரசாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பிரசாரம் நடத்திக்கொள்ள விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிபந்தனைகளுடன் விஜயின் கடலூர் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வடலூர், சேத்தியாத்தோப்பு, தொழுதூரில் விஜய் பிரசாரம் நடத்த திட்டமிட்டுள்ளார்.