ஆடிட்டர் முதல் அடிமட்ட தொண்டர் வரை கலவையான எம்.எல்.ஏ.க்களை தந்த த.வெ.க.

நிச்சயம் இது நிரந்தர மாற்றத்திற்கான வழியாக இருக்கும் என்பதே ஒட்டுமொத்த அரசியல் நோக்கர்களின் அசைக்க முடியாத கருத்தாக உள்ளது.
ஆடிட்டர் முதல் அடிமட்ட தொண்டர் வரை கலவையான எம்.எல்.ஏ.க்களை தந்த த.வெ.க.
Published on

இது சாமானிய மக்களுக்கான அரசியல், மக்களாட்சி மலர உங்க விஜய் நான் வர்ரேன்...

இந்த சொல் தமிழகத்தின் தலையெழுத்தையே இன்று மாற்றிக்காட்டி இருக்கிறது. தமிழக அரசியல் வரலாற்றில் விசில் புரட்சியால் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதி உள்ளது விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம். காலங்காலமாக ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரிடமே, குறிப்பாக இருபெரும் திராவிட கட்சிகளின் சாம்ராஜியத்தை சுற்றியே சுழன்று கொண்டிருந்த தேர்தல் அரசியலை, சாமானிய மக்களிடமும், விசுவாசமான தொண்டர்களிடமும் கொண்டு சேர்த்ததே இந்த அதிரடி வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கும் ரகசியம். திராவிட அரசியல் கட்சிகளின் கோட்டையாக பன்னெடுங்காலமாக கோலோச்சி வந்த தலைநகர் சென்னையில், பாரம்பரிய அரசியல் வாரிசுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, சமூகத்தின் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களை முன்னிறுத்தி தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள இந்த மாற்றம், தமிழகத்தின் அரசியலின் அடிப்படை அஸ்திவாரத்தையே அதிரடியாக மாற்றி அமைத்துள்ளது.

மதுரவாயல் தொகுதியில், சினிமா திரையரங்க நிர்வாகியாக அடையாளம் காணப்பட்ட ரேவந்த் சரண், தமக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டார். மக்கள் நீண்ட காலமாக போராடி வரும் நிலப்பட்டா சிக்கல்களைத் தனது தேர்தல் ஆயுதமாக மாற்றிய அவர், சுமார் 1.41 லட்சம் வாக்குகளை பெற்று 61,509 வாக்குகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளார். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கணபதியை தோற்கடித்தார்.

அதேபோல், ஆர்.கே.நகர் தொகுதியில் கல்விப் பின்னணி கொண்ட மரிய வில்சன், பல தசாப்தங்களுக்கு பிறகு தனது குடும் பத்தின் அரசியல் பாரம்பரியத்தை மீண்டும் நிலை நாட்டியுள்ளார். 97,800 வாக்குகளை பெற்றுள்ள இவர், மாணவர் மேம்பாட்டையே தனது இலக்காக கொண்டுள்ளார். தி.மு.க.வின் முக்கிய புள்ளியாக இருந்த எபினேசரை வீழ்த்தினார்.

இதெற்கெல்லாம் முத்தாய்ப்பாகவும், ஆச்சரியமான மற்றும் நெகிழ்ச்சியான வெற்றியாகவும் பார்க்கப்படுவது திரு.வி.க. நகர் தொகுதியாகும். எட்டு மாத கர்ப்பிணியான எம்.பல்லவி எனும் இல்லத்தரசி, தற்போதைய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான கே.எஸ்.ரவிச்சந்திரனை 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வியக்க வைத்துள்ளார். மிகக் குறைந்த செலவில், தனது சொந்த சேமிப்பை கொண்டு பிரசாரம் செய்த இவரது வெற்றி, கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.

இதேபோன்று, விருகம்பாக்கத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யின் கார் ஓட்டுனரும், நீண்டகால குடும்ப விசுவாசியுமான ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் வெற்றி பெற்றுள்ளதும், உழைப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் கட்சியின் போக்கை உணர்த்துகிறது. அங்கு முக்கிய வேட்பாளராக கருதப்பட்ட தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பிரபாகரராஜாவை தோற்கடித்தார்.

தேர்தல் களத்தில் வியூகங்களுக்கு பஞ்சமில்லாமல் செயல்பட்ட வில்லிவாக்கம் தொகுதியில், அனுபவம் வாய்ந்த தேர்தல் நிபுணரான ஆதவ் அர்ஜூனா, தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கார்த்திக் மோகனை தோற்கடித்து, தனது வெற்றி முத்திரையை பதித்துள்ளார். அதேசமயம், கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகிக்கும் புஸ்ஸி ஆனந்த், தியாகராயநகர் தொகுதியில் தனது அரசியல் முதிர்ச்சியால் வெற்றியை வசப்படுத்தியுள்ளார். அவர் தி.மு.க. வேட்பாளர் ராஜா அன்பழ

கனை வீழ்த்தினார். அரசியல் அனுபவமும், மக்கள் செல்வாக்கும் ஒருங்கே இணைந்திருப்பதையே இவர்களின் வெற்றிகள் எடுத்துக்காட்டி இருக்கிறது.

ஆயிரம் விளக்கு தொகுதியில் அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. முகமான ஜே.சி.டி.பிரபாகர் வெற்றி பெற்றிருப்பது, மற்ற பெரிய கட்சிகளில் உள்ள அனுபவமிக்க தலைவர்களையும் தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஈர்க்கத் தொடங்கியுள்ளதை வெளிச்சமிட்டு காட்டுகிறது. மயிலாப்பூரில் தணிக்கையாளர் பி.வெங்கடரமணனின் வெற்றி பெரிதாக பேசப்படுகிறது. அங்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேலு, பா.ஜ.க.வின் நட்டசத்திர வேட்பாளரும், முன்னாள் கவர்னருமான அரசியல் அடித்தளம் மிக்க பா.ஜ.க.வை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரை வீழ்த்தினார். இது அரசியல் களத்தில் சரியான பிரதிநிதித்துவம் இல்லாத சமூகங்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

எழும்பூர் தொகுதியில் யூடியூப் மூலம் பிரபலமான ராஜ்மோகன், தனது டிஜிட்டல் ஆளுமையைத் தேர்தல் வெற்றியாக மாற்றிக் காட்டியுள்ளார். சோழிங்கநல்லூர் தொகுதியில், முன்னாள் ஆட்டோ ஓட்டுநரான சரவண மூர்த்தி சுமார் 2.20 லட்சம் வாக்குகளை வாரிச்சுருட்டி, கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் அரவிந்த் ரமேசை வீழ்த்தி, இமாலய வெற்றி பெற்றுள்ளார். விளிம்பு நிலை மக்களின் அடிப்படைத் தேவைகளே தனது முதல் பணி என இவர் முழங்கியது வாக்காளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இவர்களுடன் வேளச்சேரியில் ஆர்.குமார், அண்ணாநகரில் வி.கே.ராம்குமார் மற்றும் சைதாப்பேட்டையில் அருள் பிரகாசம் ஆகியோரும் தங்களது தொகுதிகளை எளிதாக தக்கவைத்துக் கொண்டனர்.

ஒட்டுமொத்தமாக, தொழில்முறை வல்லுநர்கள், இல்லத்தரசிகள், முன்னாள் அரசுப் பணியாளர்கள் மற்றும் அடிமட்டத் தொண்டர்கள் என ஒரு கலவையான சக்தியைத் தமிழக அரசியலில் விஜய் களமிறக்கியுள்ளார். அதிகாரத்தின் பாதை இனி வாரிசுகளுக்கோ அல்லது குறிப்பிட்ட செல்வாக்கு மிக்கவர்களுக்கோ மட்டுமானதல்ல என்பதை சென்னை மாநகர வாக்காளர்கள் இந்தத் தேர்தலின் மூலம் உரக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

நிச்சயம் இது நிரந்தர மாற்றத்திற்கான வழியாக இருக்கும் என்பதே ஒட்டுமொத்த அரசியல் நோக்கர்களின் அசைக்க முடியாத கருத்தாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com