

தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால் குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மலைப்பகுதியில் கனமழை பெய்யும் போது அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், அப்போது அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. மழை குறைந்து நீர்வரத்து சீரானதும் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், குற்றாலம் பகுதியில் உள்ள பழைய குற்றால அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், நீர்வரத்து குறைந்ததை அடுத்து நேற்று காலை முதல் ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது பழைய குற்றால அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், பராமரிப்பு பணிகள் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் இதுவரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படாத நிலையில், பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்ற பின்னர் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குவிந்தனர். இதனால் குற்றாலம் பகுதியில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணியும் தீவிரப்ப டுத்தப்பட்டு உள்ளது.