நாகர்கோவிலில் நாளை பிரதமர் மோடி ரோடு ஷோ: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் | TN Election 2026

கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார்.
நாகர்கோவிலில் நாளை பிரதமர் மோடி ரோடு ஷோ: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் | TN Election 2026
Published on

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (15-ந்தேதி) கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார்.

இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தை வந்தடைகிறார். பின்னர் கார் மூலமாக நாகர்கோவில் வேப்பமூடு பகுதிக்கு செல்கிறார்.

வேப்பமூடு சந்திப்பில் இருந்து ‘ரோடு ஷோ’வாக செல்லும் பிரதமர் மோடி வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள், நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பாரதிய ஜனதா வேட்பாளர்கள் ஆகியோருக்கு பிரதமர் மோடி வாக்கு சேகரிக்கிறார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே ‘ரோடு ஷோ’ நடைபெறும் பகுதிகளை ஆய்வு செய்துள்ளனர். சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.​ வேப்பமூடு, மணிமேடை, அண்ணா விளையாட்டு அரங்கம் மற்றும் வடசேரி பகுதிகளில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கோட்டார் போலீஸ் நிலையம் வரையிலான சாலையில் நாளை (15-ந்தேதி) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரோடு ஷோ நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால், அவர்கள் நிற்பதற்கு தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.​

கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதி மக்கள் வேப்பமூடு மற்றும் மணிமேடை சந்திப்பு பகுதியிலும் ​குளச்சல், பத்மநாபபுரம் தொகுதி மக்கள் அண்ணா ஸ்டேடியம் பகுதியிலும் கிள்ளியூர், விளவங்கோடு தொகுதி மக்கள் வடசேரி அண்ணா சிலை அருகிலும் நிற்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.​

நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கும் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வர வேண்டாம் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியை 5 அடி தூரத்தில் நின்று பார்க்கலாம். மேலும், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், வாகனங்களை நிறுத்துவதற்குத் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் நாகர்கோவில் நகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com