திமுக, அதிமுக, தவெக தேர்தல் அறிக்கை ஒப்பீடு..!

திமுக, அதிமுக, தவெக தேர்தல் அறிக்கை ஒப்பீடு..!

மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு திமுக, அதிமுக, தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை பற்றி ஒரு ஒப்பீடு.

1. மகளிருக்கான அறிவிப்புகள்

தி.மு.க.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

பெண்கள் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ. 1000 உதவித்தொகை, ரூ. 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

சுயஉதவிக் குழுக்களில் சிறிய அளவில் தொழில் செய்வோர், தொழிலாளர்கள் ஆகியோர் தொழில் முனைவோர்களாக முன்னேறும் வகையில் 5 லட்சம் ரூபாய் வரை முதலீட்டுடன் தொழில் தொடங்க, மானியத்துடன் வங்கிக் கடனுதவி, பிணை எதுவுமின்றி வழங்கப்படும்.

புதிய பெண் தொழில்முனைவோர் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தைப்படுத்தத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நவீன உற்பத்தி முறை பயிற்சிகள் வழங்கப்படும்.

பல்வேறு வகையான தொழில்களில் சிறந்து விளங்கிடும் பெண் தொழில்முனைவோர் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் முதலமைச்சர் விருது வழங்கப்படும்.

சுயஉதவிக் குழுக்களுக்கு அவற்றின் தகுதி அடிப்படையில் தேவைக்கேற்ப, அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவிலான வங்கிக் கடன்கள் வழங்கப்படும்.

தனியார் நிறுவனங்களில் உயர் நிர்வாக வேலைவாய்ப்புகளைப் பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கச் சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இப்படி உயர் ஊதிய வேலைகளில் அமர்த்தப்படும் பெண்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 10 விழுக்காடு அந்நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படும்.

தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில், பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்கும் பொருட்டு, 1000 குழந்தை காப்பகங்கள் உருவாக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் பெண்களுக்கு 4 சக்கர வாகனம் மற்றும் பேருந்து ஓட்டுவதற்கான பயிற்சி வழங்கப்படும். இதன் வாயிலாகப் பெண்களுக்குப் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.

சுயஉதவிக் குழுப் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு Share Auto வாங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வசதி ஏற்படுத்தித்தரப்படும்.

அதிமுக

சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூ. 2,000/- வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

அம்மா இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம்: வேலைக்குச் செல்லும் மகளிருக்கு ரூ. 25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வாழ்வாதார உதவியாக, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.

மகளிர் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், கிராமப் புறங்களில் தொழில் வளத்தைப் பெருக்கி வேலைவாய்ப்பை உருவாக்கவும், மகளிர் தனியாகவும், சுய உதவிக் குழுவாகவும் தொழில் துவங்க ஒரு நபருக்கு ரூ. 10 ஆயிரம் வரை மானிய உதவி வழங்கி, 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் சிறு/குறு தொழில் நிறுவனங்கள் தொடங்க வழிவகை செய்யப்படும். இத்தகைய தொழில்கள் தொகுப்புகளாக செயல்படத் தேவையான தொடர் கட்டமைப்புகளை அரசே ஏற்படுத்தும்.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மேம்படுத்தப்பட்டு பொருளாதார உற்பத்தி மையங்களாக உருவெடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித் திட்டம் தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், திருமண உதவித் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும்

வகையில் தாலிக்குத் தங்கம் திட்டத்துடன் சேர்த்து விலையில்லா பட்டுவேட்டி-சட்டை, பட்டு சேலைகள் வழங்கப்படும். இதனால் நெசவாளர்களும் பயனடைவார்கள்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்.

சமூக ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர், விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 1,200/-ல் இருந்து ரூ. 2,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர், சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு, குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து பெண்களுக்கும் தரமான, விலையில்லா சேலையும், ஆண்களுக்கு தரமான வேட்டியும் வழங்கப்படும்.

இல்லத்தரசிகளின் பணிச் சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பிரிட்ஜ் விலையில்லாமல் வழங்கப்படும்

நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

அம்மா இல்லம் திட்டம் மூலம், கிராமப் புறங்களில் குடியிருப்பதற்கு அம்மா இல்லம் திட்டம்

வீட்டு மனையும், சொந்த வீடும் இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாத ஏழைகளுக்கு, அம்மா இல்லம் திட்டம் மூலம் அடுக்குமாடி வீடுகள் கட்டி அம்மா இல்லம் திட்டம் விலையில்லாமல் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில், ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள்/மகள்கள் திருமணமாகி தனிக் குடித்தனம் செல்கின்றபோது, அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, வீடுகள் கட்டித்தரப்படும்.

நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக ஆட்சியில், கடந்த ஐந்தாண்டு காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம்போல் ஏறிவிட்டது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சொத்து வரி, வீட்டு வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, மக்களின் இந்தச் சுமையைக் குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறப்பு உதவித் தொகையாக 10,000/- ரூபாய் வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும்.

த.வெ.க.

ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் அவர்கள் 60 வயதை எட்டும் வரையில், அவர்களுடைய வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 2500 ரூபாய் வரவு வைக்கப்படும். இதன்மூலம், குடும்பத்தலைவிகள் அவர்களுடைய அடிப்படைச் செலவுகளுக்கு மற்றவர்களை சார்ந்திருக்கும் நிலை மாறி அவர்களின் பொருளாதாரச் சுதந்திரம் காக்கப்படும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் வாங்குவதற்கான தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

தற்போது மகளிர் கட்டணமில்லாப் பயணம் குறிப்பிட்ட அரசுப் பேருந்துகளில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்த நிலையை மாற்றி, மாநிலம் முழுவதும் இயங்கும் நகர, மாநகர, வட்டங்களுக்கிடையிலான அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் வெற்றிப் பயணம் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு 8 கிராம் (சவரன்) தங்கமும், பட்டுச் சேலையும் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் மற்றும் மென்மையான துணி, டயப்பர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தாய்மாமன் சீர் பெட்டகம் வழங்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் பன்னிரென்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாயார்/காப்பாளர் வங்கிக்கணக்கில் ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளில் வரவு வைக்கப்படும். இதன்மூலம், பொருளாதாரக் காரணங்களால் மாணவர்கள் பாதியில் படிப்பைக் கைவிடும் நிலை தடுக்கப்படும்.

வறுமையில் வாடும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாத உதவித்தொகையாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். சிறு-குறு தொழில் முனைவோராக மாற முனையும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு திருப்பிச் செலுத்தத் தேவையற்ற வகையில் 5 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியமாக வழங்கப்படும்.

தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் சிறப்பாகச் செயல்பட்டுவரும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 1 லட்ச ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தும் வகையில் இ-காமர்ஸ் பிளாட்பார்ம் உருவாக்கப்படும்.

அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சேவை நிறுவனங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், லினன் துணி வகைகள், பள்ளிகளுக்குத் தேவையான பொருட்கள் தற்போது பல தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தநிலையை மாற்றி, அப்படிக் கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் 40 சதவிகிதம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அவர்களால் நடத்தப்படும் சிறு-குறு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். இதன்மூலம், ஆயிரக்கணக்கான பெண் தொழில் முனைவோருக்கு நிலையான வருமானம் உறுதி செய்யப்படும்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், திருப்பூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 10 நகரங்களில் பெண்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் கட்டமைப்புகளுடன் கூடிய சிறப்பு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

ரேசன் கடைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கான விலையில்லா சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும்.

பழங்குடியினர் மற்றும் மலைவாழ் பெண்களுக்கு விறகடுப்பு பயன்படுத்துவதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும் வகையில், கட்டணமில்லா சோலார் அடுப்புகள் வழங்கப்படும்.

2. மாநில உரிமைகள்

தி.மு.க.

வலுவான ஒற்றை அரசுமுறை மிகவும் ஆபத்தானது. மாறாக, மிக வலுவான ஒரு கூட்டாட்சிதான் இன்றைய தேவை

ஒரே நாடு ஒரே மொழி’ என்ற திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். ஆங்கிலமும், தாய்மொழியும் கொண்ட இருமொழிக் கொள்கைக்கு மாற வேண்டும்.

ஆங்கிலம் நிரந்தர ஆட்சிமொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்.

ஆங்கிலம் மட்டுமே ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என தி.மு.க. தொடர்ந்து போராடும்.

உயர்நீதிமன்றங்களில் அம்மாநில மொழி, நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்தப்பட அனுமதிக்க வேண்டும்.

1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே நிதிக்குழு பரிந்துரை செய்ய வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல். என்பதைக் கைவிட்டு அதற்கான சட்ட முன்வரைவைத் திரும்பப் பெற வேண்டும்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களை மாநில அரசே செய்ய வேண்டும்.

மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வலியுறுத்துவோம்.

சரக்கு மற்றும் சேவை வரியின் ஒருபக்க சார்பினைக் குறைத்து கூட்டாட்சி சமநிலையை உருவாக்க வலியுறுத்துவோம்.

சரக்கு மற்றும் சேவை வரி வருவாயில் தற்போது மாநிலங்களுக்கு உள்ள பங்கினை 50 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காடாக உயர்த்த வலியுறுத்துவோம்.

அதிமுக

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி மொழியாக உள்ள, தமிழ் மொழி உட்பட அனைத்தையும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக அறிவித்து, ஆட்சி மொழி சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்துவோம்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசு போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் தமிழில் நடத்த வலியுறுத்தப்படும்.

தற்போது உள்ள நடைமுறைப்படி பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழங்களில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தப்பட நிதியுதவி வழங்கப்படும். மேலும், 25 சர்வதேச பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

த.வெ.க.

ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி என்பது த.வெ.க-வின் கொள்கை. இதை உறுதி செய்ய சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு (Caste Survey) மேற்கொள்ளப்படும்.

ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு செலுத்தும் வரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய நியாயமான முழுமையான நிதிப் பங்கினைக் கோருவதற்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும். தீர்மானம் நிறைவேற்றுவதோடு மட்டும் நின்றுவிடாமல், உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டரீதியாக நிதிப் பங்கீட்டைப் போராடி, வாதாடி பெறுவதற்காக சிறப்புச் சட்டக் குழு அமைக்கப்பட்டு, தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஒவ்வொரு ரூபாய் நிதி வருவாயும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டிற்கான நிதியில் ஒன்றிய அரசின் அநீதி அறிக்கையாக வெளியிடப்படும். மேலும், தமிழகத்திற்குரிய நியாயமான நிதிப் பகிர்வை ஒன்றிய அரசிடம் இருந்து பெறுவது உறுதி செய்யப்படும்.

தமிழகத்திற்கான நிதியை ஒன்றிய அரசிடம் இருந்து பெறுவதில், த.வெ.க அரசு உறுதியாக நிற்கும். குறிப்பாக மொத்த ஜி.எஸ்.டி வரி வருவாயில் 70 சதவிகிதம் மாநிலங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படும். மாநிலங்கள் வருவாய் இழப்பில் இருந்து விடுபட முறையான ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையும் கோரப்படும்.

கல்வி (மருத்துவக் கல்வி உட்ப) ஒன்றிய அரசின் பொதுப்பட்டியலில் இருப்பதால்தான். புதிய கல்விக் கொள்கைத் திணிப்பு, நீட் தேர்வு சர்ச்சை போன்ற கல்வித் தடைகள் ஏற்படுகின்றன. எனவே, ஒன்றிய அரசின் பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை (மருத்துவக் கல்வி உட்பட) மாநிலப் பட்டியலுக்கு மாற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதில், ஒருமித்த கருத்துள்ள கட்சிகளோடு இணைந்து நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உச்ச நீதிமன்றத்திலும் இதுகுறித்து சீராய்வு மனுத்தாக்கல் செய்து சட்டப்போராட்டம் முன்னெடுக்கப்படும்.

மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுவதை த.வெ.க கடுமையாக எதிர்க்கிறது. தொகுதி மறுவரையறை மூலம் தென்னிந்திய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்க, உரிய சட்டத் திருத்தம் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு

மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பலவீனப்படுத்தும் ஒன்றிய அரசின் ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை த.வெ.க கடுமையாக எதிர்க்கிறது. அதனால், ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட முன்வரைவைத் திரும்பப் பெற உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையின் மூலம் திணிக்க முற்படும் மும்மொழிக் கல்வித் திட்டம், தமிழ்நாட்டின் மொழிப் பராம்பரியத்தையும், கல்வியின் தரத்தையும் கடுமையாகப் பாதிக்கும். த.வெ.க சார்பில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதில் ஒருமித்த கருத்துடைய மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட மாநிலங்களுடைக்கிடையான ஒரு சிறப்புக் குழு அமைக்கப்படும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அவரவர் தாய்மொழி மற்றும் இணைப்பு மொழியாக ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை நிறைவேற்ற வலியுறுத்தப்படும்.

த.வெ.க சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கப்படும்.

உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளே நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்துவதற்கு வலியுறுத்தப்படும்.

உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைய த.வெ.க சார்பில் ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்.

2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீரில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கை த.வெ.க பெற்றுத்தரும். தமிழகத்திற்குரிய நீரைப் பெறுவதில் ஏற்படுத்தப்படும் தடைகளுக்கு உடனடியான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்தின் உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொடர்ச்சியான முறையான கண்காணிப்புகளின் மூலம் காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கில் ஒரு சொட்டு நீரைக்கூட விட்டுத்தரமாட்டோம்!

இந்திய இலங்கை அரசுகளுக்குள் செய்யப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி, மன்னார் வளைகுடாவில் இந்திய தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்கவும், தக்க வைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க ஒன்றிய அரசுக்கு த.வெ.க சார்பில் உண்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் அழுத்தம் தரப்படும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை முற்றிலுமாகத் தடுக்க ஒன்றிய அரசிடம் உரிய அழுத்தத்துடன் வலியுறுத்தப்படும்.

இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வந்து, தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க த.வெ.சு சார்பில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும். இந்த நடவடிக்கை மூலம், மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் இலங்கைத் தமிழர்கள் பெறுவது உறுதி செய்யப்படும். அதுபோல, இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகளை, பண்பாட்டு அடையாளங்களை, உடமைகளைக் காக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள த.வெ.க சார்பில் அழுத்தம் கொடுக்கப்படும். இலங்கையில் இன ரீதியாக நிலவும் பாகுபாடுகளைக் களைய ஒன்றிய அரசு மூலம் த.வெ.க உரிய முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.

பிரிட்டிஷ் காலனிய இந்தியாவின் எச்சமாகத் தொடரும் ஆளுநர் பதவியை ரத்து செய்ய த.வெ.க தொடர்ந்து வலியுறுத்தும். பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தை மாநில அரசே மேற்கொள்ள வழிவகை செய்யப்படும்.

3. இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

திமுக

பொருளாதாரத் தடையை நீக்கி அரசுப்பள்ளி மாணவ, மாணவியரின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

திராவிட மாடல் ஆட்சியின் முன்னெடுப்பாகத் திகழும் முதல்வர் படைப்பகங்கள் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள அறிவுசார் மையங்கள், முதல்வர் படைப்பகங்கள் ஆகியவை போட்டித்தேர்வு பயிற்சி மையங்களாகவும் செயல்படுத்தப்படும்.

ஒன்றிய அரசுப் பணியிடங்களுக்காக UPSC, SSC, RRB போன்ற அமைப்புகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் நமது இளைஞர்கள் வெற்றி பெறும் வகையில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு உயர்தரப் பயிற்சி வழங்கப்படும். இதன் மூலம், சிறுநகரங்கள், குக்கிராமங்களில் இருந்து வரும், வாய்ப்புக் கிட்டாத, பின்புலம் இல்லாத இளைஞர்களும் அரசின் உயர்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவதற்கு துணை நிற்போம்.

ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்புவரை வழங்கப்படும் காலை உணவு, எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்படும். இதன்மூலம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் 15 இலட்சம் பள்ளி மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

எண் கல்வியிலும், எழுத்துக் கல்வியிலும் காணப்படும் கற்றல் இடைவெளியைத் தொடர்ந்து கண்காணித்து, அவற்றை அறவே நீக்கி, 100% மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல், ஆரம்பக்கல்வி நிறைவு செய்வதை உறுதிப்படுத்துவோம்.

2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்வோம்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 2030-க்குள் நூறு விழுக்காடு ‘Smart Class Room’ அமைக்கப்படுவது உறுதிசெய்யப்படும்! முந்நூறுக்கும் மேற்பட்ட நூலகங்கள் Digital பிரிவுகள் துவக்கப்பட்டு அறிவுக் கோட்டைகளாக உயரும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆயிரம் மாதிரிப் பள்ளிகள் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ மூலம் விரிவுபடுத்தப்படும்.

2030-க்குள் மேல்நிலைப் பள்ளிகளில் STEM பாடப்பிரிவு கற்றல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

நமது பள்ளி மாணவர்களுக்கு உரிய குடிமையியல் கல்வி (Civic Education) கற்பிக்கப்படும்.

மாணவர்களின் அறிவியல் சார்ந்த திறன்களை ஊக்குவித்து இளம் அறிவியலாளர்களை உருவாக்குவோம்.

மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வட்டார - மாவட்ட - மண்டல மற்றும் மாநில அளவில் பள்ளி / கல்லூரி மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்படும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும்.

2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கல்லூரிகள் அனைத்திலும் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் நவீன ஆய்வகங்கள் அமைவது உறுதி செய்யப்படும்.

கல்வியை முன்னிறுத்தி வளர்ச்சியை எட்டும் வகையில் தமிழ்நாட்டில் பின்தங்கிய 10 பகுதிகளில் உயர்கல்வி சிறப்பு வளாகங்கள் உருவாக்கப்படும்.

ஆராய்ச்சியும், புதுமையும் செழிக்க மைய ஆய்வகங்களும், Center of Excellence எனும் தொழிற்கல்வி சிறப்பு மையங்களும் நிறுவப்படும்.

எந்தவொரு கல்லூரியும் இல்லாத வருவாய் வட்டத்தில் அரசுக் கல்லூரி அமைக்கப்படும். அதேபோல் தொழிற்பயிற்சி நிறுவனம் (ITI) இல்லாத வருவாய் வட்டத்திலும் தொழிற்பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும். இந்நிறுவனங்களில் ஆய்வகங்கள் நவீனமாகவும் Industry 4.0 தரத்திலும் நிறுவப்படும்.

கிராமங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்குக் கல்வி கற்பதற்காக வரும் மாணவிகளுக்கு உண்டு உறைவிட வசதிகளை வழங்குவதற்கான மாணவியர் விடுதிகள் மாவட்டம் தோறும் அமைக்கப்படும்.

அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் மாணவர்களின் கற்றல் திறனையும், அறிவாற்றலையும் மேம்படுத்தும் வகையில் Wi-Fi வசதியுடன் கூடிய டிஜிட்டல் கற்றல் மையங்கள் ஏற்படுத்தப்படும்.

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கெனச் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும்.

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஜெர்மன், பிரெஞ்சு, கொரியன், மேண்டரின், ஜப்பானிய மொழி உள்ளிட்ட உலக அளவில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்குப் பயன்படும் மொழிகளைப் பயில்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு Mechatronics, Electronic Mechanic, Advanced CNC, Robotic Welding, Electric Vehicle, Green Energy உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்களில் பயிற்சியளித்து வேலைவாய்ப்பு கிடைத்திட ஏதுவாக புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்களும் (ITI), புதிய தொழிற்பிரிவுகளும் தொடங்கி அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை 35,000 இல் இருந்து 70,000 ஆக இரட்டிப்பாக்கப்படும்.

உயர்கல்வி பயிலும் மாணவர்கள், உலகளாவிய வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில், விளையாட்டு திறன்மிகு மாணவர்களுக்கு, நெகிழ்வான (Flexible) பாடத்திட்டம் மூலம் கூடுதல் கல்வி மதிப்புகள் (Academic Credits) வழங்கப்படும்.

உலகெங்கிலும் பணிபுரிந்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை வருகைதரு பேராசிரியர்களாக (Visiting Faculty) வரவழைத்து, அவர்களின் திறனையும் நமது மாணவர்கள் பயன்படுத்தும் வண்ணம் திட்டங்கள் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் உயர்கல்வி முடித்தபின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் திறன்பயிற்சி மேற்கொள்ள முன்வரும் ஐந்து லட்சம் மாணவர்களுக்கு 6 மாத பயிற்சி ரூ.1500 உதவித் தொகையுடன் வழங்கப்படும்.

உயர்தரத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்க, உலகத்தரம் மிக்க உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட ‘Global Talent Gateway’ சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர் ஆகிய பெருநகரங்களில் நிறுவப்படும். இது பயிற்சி ஆராய்ச்சி மையமாகவும் செயல்படும்.

அனைத்துப் பட்டப்படிப்பு துறைகளிலும் AI குறித்த பாடப்பிரிவு இன்றியமையாததாக அமைக்கப்படும். இதன் வாயிலாக அடுத்த மூன்றாண்டுகளில் AI அறிந்த பட்டம் படித்த மாணவர்கள் 8 லட்சம் பேர் தமிழ்நாட்டில் இருப்பார்கள்.

அதிமுக

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ‘STEM learning’ மையங்கள் ஏற்படுத்தப்படும்

வளர்ந்து வரும் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவியல் துறையில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கிட, 6 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே உள்ள ஜந்து பாடங்களுடன், கணினி அறிவியலை சேர்த்து ஆறு பாடங்களாக கற்பிக்கும் வகையில் பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்படும்.

கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறையில் தற்போது காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

பருவகால மாற்றம் (Climate Change) குறித்து மாணவர்களின் பாடத் திட்டத்தில் சேர்க்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உரிய காலத்தில் விலையில்லா மடிக் கணினி வழங்கப்படும்.

மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில், கல்வித் தொலைக்காட்சி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

உலகளவில் புகழ்பெற்ற ஹார்வேர்டு, ஆக்ஸ்போர்டு, ஏல், கேம்பிரிஜ், MIT போன்ற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 10 சர்வதேச தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் தமிழ் நாட்டில் தொடங்கப்படும்.

தற்போது இயங்கிவரும் ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாக தரம் உயர்த்தப்படும். மேலும், ஊர்ப்புற நூலகங்களில் உள்ள நூலகர் காலிப் பணியிடங்கள் முழுவதும் நிரப்பப்படும்.

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மட்டுமே முடித்துவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு திறன்சார் பயிற்சி வழங்கி, எவ்விதப் பிணையும் இல்லாமல் ரூ. 25 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படும்.

தமிழ் நாட்டில் இயங்கும் அனைத்துத் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்களுக்கே

வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்படும்.

அரசு அலுவலகங்களில் உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் TNPSC மூலம் நிரப்பப்பட்டு, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி, அவர்களின் வாழ்வு மேம்பட அதிகபட்சம் ரூ. 10 லட்சம் கடன் பெற வழிவகை செய்வதுடன், அதில் 50% மானியம் வழங்கப்படும்.

நகர்புறங்களில், குறிப்பாக ஏழைகள் வாழும் பகுதிகளில் உள்ள மகளிர் மற்றும் இளைஞர்கள் உரிய வேலை வாய்ப்பை பெறுவதற்கு, ஓட்டுநர் பயிற்சி, எலக்ட்ரிக்கல், பிளம்பிங், தையல் போன்ற பணிகளை மேற்கொள்ள பயிற்சியும், பெண்களுக்கு வீட்டு வேலைகள், சமையல் முதியோர் மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் (ஆனை றுiஎநள) மருத்துவ தாதிகள், செவிலியர்கள், தையல் போன்றவற்றில் பயிற்சிகள் வழங்கி, அவர்களை ஒருங்கிணைத்து வேலை வாய்ப்புகள் பெறும் வகையில் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு, அவர்கள் பணி, சம்பளம் முதலியவை உறுதிசெய்யப்பட்டு

வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும். இதற்கென தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்.

படித்த இளைஞர்களின் திறன் வளர்ப்புக்கென (Skill Development) தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு புதிய தொழில்நுட்பத்துடன் ஆன்லைன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.

UPSC, NEET, IT-JEE, TNPSC, Railways, Banks போன்ற போட்டித்தேர்வுகளில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் வெற்றி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட நூலகங்கள்

நவீனப்படுத்தப்பட்டு, நூலகங்களிலேயே போட்டித் தேர்வுகளுக்கு இளைஞர்களை தயார்படுத்த உரிய வசதிகளுடன் உயர்தர பயிற்சி மையம் அமைக்கப்படும்.

படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெறுவதை உறுதி செய்ய, அவர்களுக்கு மொழியறிவு, ஆளுமை பண்புகளுக்கான பயிற்சி, திறன் மேம்பாடு, மின்திறன் பயிற்சி போன்றவை அயலக வேலை வாய்ப்பு மனிதவள நிறுவனம் (Overseas Manpower Development Corporation) மூலமாக இலவச பயிற்சி வழங்கப்பட்டு, அவர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

த.வெ.க.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ உள்ளிட்ட டிப்ளமோ படிப்புகள் முடித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகை பதிவு செய்ததில் இருந்து முதல் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.

செய்யப்படும் அரசுப் பணிகளுக்கு நியமனங்கள் நேர்மையான முறையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், சிறப்புச் சட்டம் இயற்றப்படும்.

அரசுத் துறைகளில் உள்ள அனைத்துக் காலிப்பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும்.

பட்டப்படிப்பு (UG) முதல் ஆராய்ச்சிப் படிப்பு (PhD) வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் 20 லட்சம் ரூபாய் வரை பிணையில்லா (Collateral Free) கடன் வழங்கப்படும். இதன் மூலம், மாணவர்கள் விரும்பிய படிப்பை அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் எந்தவித பொருளாதாரத் தடைகளும் இல்லாமல் படிப்பது உறுதி செய்யப்படும்.

இளைஞர்கள் திறனை மேம்படுத்தும் வகையில் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் இளைஞர்கள் இந்த முயற்சியினால் பயன்பெறுவது உறுதி செய்யப்படும். இந்தப் பயிற்சிக் காலத்தில், பட்டதாரிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாயும், தொழிற்கல்வி பயின்றவர்களுக்கு மாதம் 8000 ரூபாயும் வழங்கப்படும். நிரந்தர வேலைவாய்ப்பில்லாத குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வரை அரசு சார்பில் பிணையில்லா (Collateral Free) கடன் வழங்கப்படும். இதன்மூலம், ஏராளமான இளைஞர்களின் தொழில்முனைவோராகும் கனவு நனவாகும்.

தமிழ்நாட்டு இளைஞர்களை தங்கள் நிறுவனங்களில் 75 சதவிகிதம் அளவுக்கு பணியமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு மாநில ஜி.எஸ்.டி. வரியில் 2.5% மானியமும், மின் கட்டணத்தில் 5% மானியமும், அரசு கொள்முதலில் முன்னுரிமையும் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டு இளைஞர்கள் பெருமளவு வேலைவாய்ப்புப் பெறுவது உறுதி செய்யப்படும்.

முதலமைச்சர் மக்கள் சேவை நண்பர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து மற்றும் நகர உள்ளாட்சிகளில் 5 லட்சம் இளைஞர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டு அவர்களுக்கு மாத ஊதியமாக 18,000 ரூபாய் வழங்கப்படும். இந்தப் பணியாளர்கள் மாநில அரசின் சேவை மற்றும் திட்டங்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று சேர்வதை உறுதி செய்வார்கள். அரசுக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான இந்த கூட்டு முயற்சி அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்பட உதவும்.

தமிழ்நாடு அரசு கொள்கை மற்றும் நிர்வாக முடிவுகளில் இளைஞர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக் குழு உருவாக்கப்படும்

பொள்ளாச்சி, கரூர், கோவில்பட்டி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், சிவகாசி உள்ளிட்ட 25 நகரங்களில் மைக்ரோ டெக் பார்க்குகள் அமைக்கப்படும். ஒவ்வொரு மைக்ரோ டெக் பார்க்கும் அதிவேக இணைய வசதி, நவீன ஆலோசனை அரங்கு, கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும். அந்தந்த நகரத்தைச் சார்ந்த இளைஞர்கள் சொந்த ஊரில் இருந்தபடியே (Work from Hometowr) உலகளவில் பணியாற்றும் வாய்ப்பை இந்த மைக்ரோ டெக் பார்க்குகள் உருவாக்கும்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு அரசு பள்ளியிலும் உலகத் தரத்தில் அறிவியல் ஆய்வகங்கள், அதிவேக இணைய வசதியோடு கூடிய கணினி ஆய்வகங்கள், டிஜிட்டல் பிரிவுகளை உள்ளடக்கிய நவீன நூலகங்கள் STEM (Science, Technology, Engineering, Maths) நவீன கழிப்பறைகள், சுத்தமான குடிநீர் வசதி, தரமான அறைகலன்கள், ஆலோசனை மையங்கள் ஆகியவை அமைக்கப்படும். 2031-க்குள் தமிழ்நாட்டின் அனைத்து பள்ளி வகுப்பறைகளும் ஸ்மார்ட் க்ளாஸ்ரூம்களாக மாற்றப்படும்.

குறைபாடுகளைக் மாணவர்களின் கற்றல் திறனில் பாலின, சமூக அடிப்படையிலான களைய சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டு முழுவீச்சில்செயல்படுத்தப்படும். இதன்மூலம் கற்றல் விளைவுகளில் (Learning Outcomes) நாட்டிலேயே முதல் மாநிலமாகவும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாகவும் தமிழ்நாடு மாற்றப்படும்.

கல்வியில் சிறந்து விளங்கும் சமூசு மற்றும் பொருளாதார நிலைகளில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென தமிழகம் முழுக்க 100 உன்னதப் பள்ளிகள் திறக்கப்படும். இப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி. உணவு, உறைவிடம், பாடநூல், சீருடை ஆகியவை கட்டணமில்லாமல் வழங்கப்படும். இந்த 100 பள்ளிகளில் 50 பள்ளிகள் மாணவிகளுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்படும்.

அதிகரித்து வரும் பள்ளி மாணவர் இடைநிற்றலைத் தடுக்கும்பொருட்டு, தமிழகம் முழுக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியோடு கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும். சமூக, பொருளாதாரக் காரணங்களால் பள்ளிக் கல்வியை கைவிடும் மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க 1000 கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்புவரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு ஊட்டச்சத்து மிக்க காலை உணவு வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களும் சமச்சீர் ஊட்டச்சத்து பெறுவது உறுதிசெய்யப்படும்.

இளங்கலை பட்டப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்படும். மேலும், முதுகலை பட்டப்படிப்பிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.

பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலைமைப்பண்புகளை மென்மேலும் கூர்மைப்படுத்தும் விதமாக தலைமை ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கென பிரத்தியேகமாகத் தலைமைத்துவப் பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு கற்றல் விளைவுகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

பள்ளிக்காலத்திலேயே மாணவர்களிடையே தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு மாணவர் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதலீட்டு நிதியாக 5,100 ரூபாய் வழங்கப்படும். மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் ஒன்றாக சிறப்பு தொழில்முனைவோர் வகுப்புகள் எடுக்கப்படும்.

தமிழ்நாட்டு அரசுப் பள்ளி மாணவர்களை முன்னோடி மாணவர்களாக மாற்றும் வகையில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு அறிவியல் பயிற்றுவிக்கப்படும். மேலும், மாறிவரும் காலசூழலை உணர்ந்து மாணவர்கள் பொறுப்போடு செயல்பட 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் காலநிலை அறிவியலும் பயிற்றுவிக்கப்படும்.

அரசு தொழிற்கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக ஐந்து பொறியியல் கல்லூரிகளும் மூன்று மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கப்படும். மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி வழங்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும். முப்பது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தன்னாட்சிக் கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும்.

பள்ளிப்படிப்பை முடித்து அரசு கல்லூரியில் இணையும் ஒவ்வொரு அரசுப் பள்ளி மாணவருக்கும் கல்லூரிச் சேர்க்கை செலவுகளால் ஏற்படும் பொருளாதாரச் சுமையை குறைக்கும் வகையில் 8,000 ரூபாய் வழங்கப்படும்.

உலகின் தலைசிறந்த முதல் 100 கல்வி நிலையங்களில் பயில்வதற்கு தகுதி பெறும் தமிழக மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும்.

அரசுப் பள்ளிகளில் பயின்று பின்னர் அரசுக் கல்லூரிகளில் இணைந்து பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கும் கல்லூரிக் கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கென பிரத்தியேக பல்கலைக் கழகம்

செயற்கை நுண்ணறிவு, க்வாண்டம் கம்ப்யூட்டிங். பயோடெக் காலநிலை தொழில்நுட்பம். விண்வெளித் தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி என வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் சார்ந்த பட்டப்படிப்புகள் பயில Periyar Institute of Emerging Technologies (PIET) உருவாக்கப்படும். இந்த பல்கலைக் கழகம் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களோடும் தொழில்நுட்ப நிறுவனங்களோடும் இணைந்து செயல்படும்.

தமிழகம் முழுவதுமுள்ள ஐ.டி.ஐ.கள் நவீனமயமாக்கப்பட்டு புதிதாக Augmented Reality (AR), Virtual Reality (VR), செயற்கை நுண்ணறிவு (AI), Machine Learning (ML) ஆகிய பிரிவுகளின் கீழ் பாடத்திட்டங்கள் சேர்க்கப்படும். மாணவர்களின் தேவைக்கேற்ப புதிய ஐ.டி.ஐ.கள் திறக்கப்படும்.

கிராமப்புற இளைஞர்கள் போட்டித்தேர்வுகளில் சிறப்பாக செயல்பட ஒவ்வொரு மாவட்ட நூலகமும் நவீனமயமாக்கப்பட்டு அங்கே போட்டித் தேர்வுகளுக்கான உயர்தர பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

ஒவ்வொரு இளைஞரின் கற்றல் திறனும் செயற்கை நுண்ணறிவின் வழியே பகுப்பாய்வு செய்யப்பட்டு அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்படும்.

4. விவசாயம் மற்றும் உழவர் சார்ந்த அறிவிப்புகள்

திமுக

தமிழ்நாட்டு விவசாயிகள் வேளாண் உற்பத்தியில் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து புரிந்து வந்தாலும், கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் குழாய் பாசனத்தை பெருமளவில் நம்பியே இன்றும் தமிழ்நாட்டின் விவசாயம் உள்ளது. இப்பாசனத்தை மேம்படுத்தும் வகையில், இலவச மின்சாரம் பெறும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, அவர்கள் தற்போது வைத்திருக்கும் பம்புகளின் சக்தி மற்றும் அவர்களின் பாசனத் தேவைக்கு ஏற்ப, எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்புசெட்டுகள் வழங்கப்படும்.

பேரிடர் காலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் இறவைப் பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகை ஹெக்டேர் ஒன்றுக்கு 25,000 ரூபாயாகவும், நீண்டகாலப் பயிர்களுக்கு 27,000 ரூபாயாகவும், மானாவாரிப் பயிர்களுக்கு 12,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ. 4,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

டெல்டா மாவட்டங்களில் 10,500 கி.மீ மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 5,000 கி.மீ நீளத்திற்கு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மண்வள அட்டைகள் 43 இலட்சம் உழவர்களுக்கு வழங்கப்பட்டு, இயற்கை வேளாண்மைப் பரப்பு 17 ஆயிரம் ஹெக்டேராகவும், உயிர் வேளாண்மைப் பரப்பு ஒரு இலட்சம் ஹெக்டேராகவும் விரிவுபடுத்தப்படும்.

உணவு உற்பத்தி 125 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படும்.

மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஆயிரம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும்.

5,000 சூரிய சக்தி பம்பு செட்டுகள், 1,000 சூரிய சக்தி உலர்த்திகள் மற்றும் 1,000 சூரிய சக்தி மின் வேலிகள் அமைக்கப்படும்.

ஊரகப் பகுதிகளில் ‘உழவர் சந்தைகள்’ வெற்றிகரமாக செயல்படுவது போல், நகர்ப்புற பகுதிகளில், 100 ‘உழவர் அங்காடிகள்’ அமைக்கப்படும்.

5 ஆண்டுகளில் 5 கோடி பனை விதைக்கப்படும். பனைப் பொருட்களுக்கான சிறப்புக் குழுமங்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பனைப் பொருட்களை ஆவின் விற்பனை நிலையங்கள் வழியாகச் சந்தைப்படுத்த ஏற்பாடு செய்யப்படும்

அதிமுக

நெல் உற்பத்திச் செலவை கருத்தில்கொண்டு விவசாயிகள் நலனுக்காக நெல்லுக்கு தற்போது வழங்கி வரும் ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500/- என விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கரும்பு உற்பத்திக்கு ஆகும் செலவை கருத்தில் கொண்டு, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500/- என லாபகரமான நியாய விலை (Fair and Remunerative price) நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாய உற்பத்தியாளர் குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு உரம், விதைகள் போன்ற இடுபொருட்கள் வாங்க, உற்பத்தி மானியமாக ஆண்டுக்கு ஹெக்டேர் ஒன்றிற்கு ரூ. 15,000/- வரை வழங்கப்படும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம், விவசாயிகள் பெற்றுள்ள வேளாண்மை பயிர் கடன் தள்ளுபடி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

Dr. M.S. சுவாமிநாதன் தலைமையிலான தேசிய வேளாண் ஆணையத்தின் பரிந்துரைப்படி, அனைத்து உணவு தானிய வேளாண் விளை பொருட்களும், குறிப்பாக உணவு தானியம், பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் (MSP) செய்யப்பட்டு, அதன் பயன் முழுமையாக விவசாயிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும்.

தற்போது வேளாண் வணிகப் பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையில், 5% காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் செலுத்த வேண்டி உள்ளது. விவசாயிகளின் நலன் காக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் பிரீமியம் கட்டணத் தொகையில் 2% மட்டும் விவசாயிகள் செலுத்தவும், மீதமுள்ள காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

‘தரிசு நில மேம்பாட்டுத் ‘தரிசு நில மேம்பாட்டுத்திட்டம்’ தனி இயக்கமாக செயல்படும்.

புதிய விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும், மின்கம்பங்களுக்குக் காத்திருக்காமல், அவர்கள் விரும்பினால் நேரடியாக 100% அரசு மானியத்தில் சூரிய ஒளி பம்ப் செட்டுகள் வழங்கப்படும்.

விவசாயப் பணியின்போது, விவசாயிகள் இடி, மின்னல் தாக்கியோ, விஷப் பாம்பு கடித்தோ, வனவிலங்குகளால் தாக்கப்பட்டோ உயிரிழந்தால், அவர்களது குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.

டெல்டா மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உலர்களம் மற்றும் சேமிப்பு கிடங்குகள் அமைப்பதுடன், அனைத்து தாலுகா அளவிலும் போதுமான அளவில் கிடங்கு வசதிகளும்

அமைத்து, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

உணவு பதப்படுத்தும் தொழில் பூங்காக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தப்படும்.

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய விளை பொருட்களுக்கும், பால் பொருட்களுக்கும், மாவட்டத்தின் மையப் பகுதியில் குளிர்சாதனக் கிடங்கு (Cold Storage) ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு, அறுவடை நெல்லை பாதுகாக்க மானிய விலையில் தார் பாய் வழங்கப்படும்

‘இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்’ பெயரில் தமிழ் நாடு ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்’ வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளில் இயற்கை வேளாண் கல்வி மையங்கள் உருவாக்கப்படும்.

சொட்டுநீர் பாசனம் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும்.

த.வெ.க.

5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்.

சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயிகளின் குடும்பத்திற்கும் விதைப்புக் கால நிதியுதவியாக ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளில் (ஜூலை ஆகஸ்ட் பருவம், ஜனவரி-பிப்ரவரி பருவம்) வழங்கப்படும். விதைப்புக்கால செலவுகளை சமாளிப்பதற்கு இந்த நிதி உதவியாக இருக்கும்.

குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு, உழவர் உரிமம் அட்டை வழங்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்படும். இந்த உரிம அட்டை வைத்திருக்கும் உழவர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

நெல்லுக்கு குவிண்டாலுக்கு 3500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4500 ரூபாயும் குறைந்த பட்ச ஆதார விலையாக வழங்கப்படும். மஞ்சள், கரும்பு, நெல் மற்றும் கொப்பரைத் தேங்காய் உள்ளிட்டவற்றின் சந்தை விலையில் சரிவு ஏற்படும்போது, அந்த இழப்பையும் அரசு ஏற்றுக் கொள்ளும் ஆதாரவிலைத் தொகை மற்றும் சந்தை இழப்பீட்டுத் தொகை உள்ளிட்ட இந்த நிதி அனைத்தும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேடியாக செலுத்தப்படும்.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் ஆலோசனைகள், எளிமையாகச் சந்தைப்படுத்தும் வழிமுறைகள், விலை நிர்ணயம் தொடர்பான வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை கண்டறிய விவசாயிகள் வருமான உயர்வு ஆணையம் அமைக்கப்படும். இது ஆண்டுதோறும் அரசுக்கு மேற்கண்டவை குறித்துப் பரிந்துரைகள் வழங்கும்.

விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், தமிழகம் முழுவதும் கூடுதல் வேளாண் வானிலை அறிவியல் மையங்கள் (Agro-meteorological) அமைக்கப்படும். இதன்மூலம், மழைக்காலங்களில் பாதிக்கப்படும் பயிர்களின் இழப்பு நுல்லியமாக கணக்கிடப்படும். அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு இழப்பீடு விரைவாக வழங்கப்படும். வேளாண்மை நடைபெறும் நிலம் 100 சதவிகிதம் பயிர்க் காப்பீட்டில் கொண்டுவரப்படும்.

தேங்காய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் தென்னை விவசாயிகளைப் பாதிக்காத வகையில், கொப்பரைத் தேங்காய் ஆதார நிதி ஒதுக்கப்படும்.

தமிழ்நாடு இயற்கை விவசாயத் திட்டம் (Organic Farming) தமிழ்நாட்டை இயற்கை விவசாயத்தில் முன்னணி மாநிலமாக மாற்ற கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

செயற்கை உர விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறும் விவசாயிகளுக்கு முதல் மூன்று வருடங்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.

தஞ்சையில் நம்மாழ்வார் இயற்கை வேளாண் கல்லூரி அமைக்கப்படும்.

உழவர் உற்பத்தியாளர் அமைப்பில் இணையும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்கு கட்டணமில்லா உயர்கல்வி வழங்கப்படும்.

நெல் மற்றும் கொள்முதல் செய்யப்படும் பிற விளைபொருட்கள் காய்கறிகள், உணவு தானியங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் உட்பட அனைத்து கொள்முதல் நிலையங்கள்.

தொகுப்பு மையங்கள் (Cluster hubs) மற்றும் சேமிப்புக் கொள்கலன்களில் (Silos) முறையாகக் கையாளப்பட்டு பாதுகாக்கப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com