

முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக பள்ளி கல்வித்துறையில் லஞ்சம் புரையோடிப் போயிருந்ததாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர். நந்தகுமார் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ரூ.40 லட்சம் வரை லஞ்சம்..
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முந்தைய ஆட்சியில் புதிய சிபிஎஸ்இ பள்ளிகளைத் தொடங்குவதற்கான தடை இல்லா சான்றிதழ் (NOC) பெற ரூ.25 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை லஞ்சம் கேட்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மேலும், பள்ளிகளின் அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இடைத்தரகர்கள் மூலம் கட்டாய வசூல் செய்யப்பட்டதாகவும், பணம் தராத பள்ளிகளின் கோப்புகள் பல ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் திமுக ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் லஞ்சம் வாங்குவதற்காகவே தனி அலுவலகம் வைத்திருந்ததாக தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள குளோபல் 360 என்ற நிறுவனத்தில் லஞ்சம் பெறப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
கல்வி அமைச்சராக இருந்த அன்பில் மகேஷின் குடும்ப உறுப்பினர், நண்பர் மற்றும் திமுகவினர் என 3 பேர் லஞ்சம் வாங்குவதற்காக நியமனம் செய்யப்பட்டனர்.
DPI அலுவலகத்தின் 2 வது மாடியில் இதற்கான தனி அறை அமைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் என்ற பெயரில் அலுவலகம். அமைச்சர்கள் மட்டுமல்லாமல் அதிகாரிகளும் லஞ்சம் பெற்றனர்.
10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை வாங்கியதாக புகாரளித்த அவர், சிபிஎஸ்இ, தனியார் பள்ளிகள் என மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப லஞ்சம் வாங்கினார்கள்.
இவ்வாறு நந்தகுமார் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி உறுதிமொழி..
இந்த விவகாரம் குறித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தற்போதைய சூழலில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால், பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் NOC சான்றிதழ்களைப் பெற இனி ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என உறுதியளித்துள்ளார்.