TN Assembly Election| குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் கந்தசஷ்டி கவச கல்வெட்டு மறைப்பு- பக்தர்கள் எதிர்ப்பால் மீண்டும் திறப்பு

அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவுப்படி பணியாளர்கள் மொத்த கல்வெட்டையும் காகிதம் ஒட்டி மறைத்தனர்.
TN Assembly Election| குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் கந்தசஷ்டி கவச கல்வெட்டு மறைப்பு- பக்தர்கள் எதிர்ப்பால் மீண்டும் திறப்பு
Published on

தமிழகத்தில் அடுத்த மாதம் 23-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களின் பெயர், படம், அறிவிப்பு பலகைகள் மறைக்கப்பட்டு வருகின்றன.

மறைந்த தலைவர்களின் சிலைகளை மூட வேண்டாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது அந்த சிலைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசியலுக்கு தொடர்பே இல்லாத கோவிலில் கந்தசஷ்டி கவச கல்வெட்டு மறைக்கப்பட்ட சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனி முருகன் கோவிலின் உப கோவிலான கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவச வரிகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் உபயதாரர் பெயரும் இடம் பெற்றுள்ளது.

அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவுப்படி பணியாளர்கள் மொத்த கல்வெட்டையும் காகிதம் ஒட்டி மறைத்தனர். கோவில் திருப்பணி மேற்கொண்ட உபயதாரர்களின் பெயர்களும் மறைக்கப்பட்டன.

இதைப் பார்த்ததும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு சிலர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் வேகமாக பரவியது. அரசியலுக்கும் ஆன்மீகத்துக்கு வித்தியாசம் தெரியாமல் கோவிலில் உள்ள கந்த சஷ்டி கவச கல்வெட்டை எதற்காக மறைத்தீர்கள் என பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அந்த காகிதங்கள் கிழித்து அகற்றப்பட்டன. இது குறித்து கோவில் அதிகாரிகள் தெரிவிக்கையில், உபயதாரர்களின் பெயரை மறைக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் தவறுதலாக மொத்த கல்வெட்டும் மறைக்கப்பட்டு விட்டது என்றார்.

உபயதாரர்கள் அரசியல் கட்சி பிரமுகர்களாக இருந்தால் மட்டுமே மறைக்கப்பட வேண்டும். தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள் என்றால் மறைக்கப்பட வேண்டியது இல்லை. இந்த புரிதல் கூட இல்லாமல் அறநிலையத்துறை அதிகாரிகள் எவ்வாறு செயல்படுகின்றனர் என பக்தர்கள் வேதனையுடன் சென்றனர்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மற்ற கோவில்களால் இது போன்று கல்வெட்டுகள் மறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com