TN Assembly Election| கோவையில் சட்டசபை தேர்தலில் 2 எம்.எல்.ஏ.க்களை தேர்ந்தெடுக்க உள்ள வினோத கிராமம்

எங்களுக்கு அடிப்படையான குடிநீர் பிரச்சனைக்கே இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
கருமத்தம்பட்டி அடுத்துள்ள பொன்னாண்டம்பாளையம் கிராமத்தை படத்தில் காணலாம்.
கருமத்தம்பட்டி அடுத்துள்ள பொன்னாண்டம்பாளையம் கிராமத்தை படத்தில் காணலாம்.
Published on

கோவை:

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள நகரம் முதல் கிராமம் வரையிலும் மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற தயாராகி வருகின்றனர்.

பொதுவாகவே ஒரு கிராமம் இருக்கிறது என்றால் அது ஒரு ஊராட்சியின் கீழ் இருக்கும். ஒரு சட்டசபை தொகுதி, ஒரு பாராளுமன்ற தொகுதியின் கீழ் தான் இருக்கும்.தேர்தல் சமயங்களில் மக்கள் அந்த கிராமத்தில் அமைக்கப்படும் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்களிப்பார்கள்.

ஆனால் தமிழகத்தில், 4 உள்ளாட்சி அமைப்புகள், 2 சட்டசபை தொகுதிகள், 2 மக்களவை தொகுதிகளின் கீழ் வரக்கூடிய ஒரு வினோத கிராமம் கோவை மாவட்டத்தில் இருக்கிறது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த பொன்னாண்டம்பாளையம் கிராமம் தான் 2 சட்டசபை தொகுதிகளின் கீழ் வரக்கூடிய அந்த வினோத கிராமம் ஆகும். இக்கிராமத்தில் 300 குடும்பங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இதுதவிர புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அதிகளவில் இங்கு வசதித்து வருகிறார்கள்.

இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் தங்களின் வாழ்வாதாரத்துக்கு தொழிற்சாலைகளையும், தொழில் நிறுவனங்களையுமே சார்ந்துள்ளனர்.

இந்த கிராமத்தில் மொத்தம் 7 தெருக்கள் உள்ளன. இந்த 7 தெருக்களும் நான்கு உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளை ஒன்றையொன்று சந்திக்கின்றன.

மேலும் இந்த கிராமத்தில் உள்ள 7 தெருக்கள் மோப்பிரிபாளையம் பேரூராட்சி மற்றும் கணியூர், அரசூர், நாரணபுரம் ஆகிய கிராமப் பஞ்சாயத்துகள் என நான்கு உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது.

இப்பகுதியில் உள்ள 200 வீடுகளில் 650 வாக்காளர்கள் வசிக்கும் பெரும் பகுதி கணியூர் பஞ்சாயத்து எல்லைக்குள்தான் வருகின்றன. சில வீடுகள் அரசூர் பஞ்சாயத்து கீழும், சில வீடுகள் அவிநாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் நாரணபுரம் பஞ்சாயத்துக்கு கீழும் வருகின்றன. 30 வீடுகள் மட்டுமே மோப்பிரிபாளையம் பேரூராட்சியின் கீழ் வருகின்றது.

அதிலும் இந்த கிராமத்தின் ஒரு பகுதி, அவிநாசி சட்டசபை தொகுதியிலும், நீலகிரி பாராளுமன்ற தொகுதியிலும் வருகிறது. மீதம் உள்ள இடங்கள் சூலூர் சட்டசபை தொகுதியிலும், கோவை பாராளுமன்ற தொகுதியிலும் வருகின்றன.

தற்போது அடுத்த மாதம் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில் ஒரு பகுதியினர் சூலூர் சட்டசபையில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுக்கும், ஒரு பகுதியினர் அவினாசி சட்டசபை தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க உள்ளனர்.

இதற்காக அந்த கிராமத்தில் 2 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டு வருகிறது.

ஓரே கிராமம் தான் ஆனால் தொகுதி 2 ஆக வருவதால் ஒரே கிராமத்தை சேர்ந்த மக்கள் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடும் வாக்காளர்களுக்கு வாக்களித்து 2 எம்.எல்.ஏ.க்களை தேர்ந்தெடுக்க உள்ளது விசித்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது ஒருவிதத்தில் விநோதமாக இருந்தாலும், இந்த விநோத சூழலால் அந்த கிராம மக்களுக்கு எந்தவித ஆதாயமும் கிடைத்ததில்லை. மாறாக, அடிப்படை வசதிகளைப் பெறுவதற்குக்கூட பல நிர்வாகச் சிக்கல்களை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

எனவே, தங்கள் கிராமத்தை சூலூர் சட்டசபைக்கு உட்பட்ட கணியூர் ஊராட்சி எல்லைக்குள் ஒரே உள்ளாட்சி அமைப்பின் கீழ் இணைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, 20 ஆண்டுகளாக நாங்கள் எங்கள் கிராமத்தை ஒரே ஊராட்சியின் கீழ் இணைக்க வலியுறுத்தி போராடியுள்ளோம். ஆனால் எங்களுக்கு அடிப்படையான குடிநீர் பிரச்சனைக்கே இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.

மேலும் எல்லைப் பிரச்சனையால், ஆவணங்கள் பெறுதல் உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், அரசு அலுவலகங்களுக்கு மாறி, மாறி மக்கள் அலைய வேண்டியுள்ளது.

எனவே இதுபோன்ற இடர்பாடுகளை தவிர்க்க தங்களின் அனைத்து ஆவணங்களையும் கணியூர் பஞ்சாயத்துக்கு கீழ் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com