TN Assembly Election | தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து மயிலாப்பூரில் அமித் ஷா இன்று ரோடு ஷோ

அமித்ஷாவை தொடர்ந்து, மேலும் சில மத்திய மந்திரிகள் நாளை தமிழகத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
TN Assembly Election | தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து மயிலாப்பூரில் அமித் ஷா இன்று ரோடு ஷோ
Published on

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் ஓய இன்னும் சில நாட்களே இருக்கிறது. எனவே, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேசிய தலைவர்களும் களத்தில் இறங்கியுள்ளதால், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அந்தவகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி மற்றும் சென்னை மயிலாப்பூரில் இன்று ரோடு ஷோ நடத்துகிறார்.

முதலில், மொடக்குறிச்சியில் காலை 10.30 மணிக்கு அமித்ஷா ரோடு ஷோ நடத்த உள்ளார். இதில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பங்கேற்கிறார்கள். ரோடு ஷோ மூலம் மக்களிடம் அவர் வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.

ஈரோடு பயணத்தை முடித்துக்கொண்டு கோவை வரும் அமித்ஷா அங்கிருந்து தனி விமானம் மூலம் மதியம் 12 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

பின்னர் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் அமித்ஷா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் மாலை 4.20 மணிக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து, மாலை 5 மணிக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகிலிருந்து தொடங்கும் ரோடு ஷோவில் அமித்ஷா பங்கேற்கிறார்.

மயிலாப்பூர் பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் சென்னையில் போட்டியிடும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்கிறார். மாலை 6 மணி வரை இந்த ரோடு ஷோ நடக்க இருக்கிறது. இந்த ரோடு ஷோ பிரசாரம் முடிந்த பிறகு கிண்டி நட்சத்திர விடுதிக்கு செல்கிறார்.

பின்னர் இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்படுகிறார்.

அமித்ஷாவை தொடர்ந்து, மேலும் சில மத்திய மந்திரிகள் நாளை (திங்கட்கிழமை) தமிழகத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com