த.வெ.க.வில் இணைந்தவர்கள் இன்று முதலமைச்சர் விஜய்யை சந்திக்கின்றனர்

த.வெ.க. பொதுச்செயலாளர் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் அ.தி.மு.க. மற்றும் மாற்று கட்சிகளை சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் த.வெ.க. வில் இணைந்தனர்.
முதலமைச்சர் விஜய்
Published on

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தோல்வி அடைந்தன.

முன்னாள் அமைச்சர்கள்

சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு அ.தி.மு.க. மற்றும் மாற்று கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் அக்கட்சிகளில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.

அவர்களை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத் ஆகியோர் த.வெ.க.வில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேற்று முன்தினம் த.வெ.க.வில் இணைந்தனர்.

10 ஆயிரம் பேர்

அவர்களுடன் ஆதரவாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் த.வெ.க.வில் இணைந்துள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.வளர்மதி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 9 பேரும் அன்று த.வெ.க.வில் இணைந்தனர்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அ.தி.மு.க. உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் த.வெ.க.வில் இணைந்து வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் த.வெ.க.வில் இணைய முடிவு செய்திருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடந்து வந்தது.

இணைந்தனர்

இதற்கிடையே நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் மரணம் அடைந்ததால் அன்று நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து அன்று இணைய இருந்த முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் இன்று த.வெ.க.வில் இணைந்தனர்.

இதற்கான இணைப்பு விழா சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. இதில் த.வெ.க. பொதுச்செயலாளர் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் அ.தி.மு.க. மற்றும் மாற்று கட்சிகளை சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் த.வெ.க. வில் இணைந்தனர்.

முன்னாள் எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள்

முன்னாள் எம்.பி.க்கள் கே.ஆர்.பி.பிரபாகரன் (திருநெல்வேலி), ஆர்.பார்த்திபன் (தேனி), கே.என்.ராமச்சந்திரன் (ஸ்ரீபெரும்புதூர்), பையூர் சந்தானம் (திருவண்ணாமலை), முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலைராஜன் (தி.நகர்), கண்டோன்மெண்ட் சண்முகம் (ஆலந்தூர்), ஆர்.சின்னசாமி (சிங்காநல்லூர்), கீதா மணிவண்ணன் (கிருஷ்ணராயபுரம்), ஜி.அன்பழகன் (நிலக்கோட்டை), ஆர்.பாண்டியம்மாள் (உசிலம்பட்டி), மகேந்திரன், விஸ்வேஸ்வரன், மூகாம் பிகை மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் இன்று த.வெ.க.வில் இணைந்தனர். மேலும் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் இன்று த.வெ.க.வில் இணைந்தனர்.

கடந்த சில வாரங்களாகவே மாற்று கட்சிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும் இணைந்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் முதலமைச்சர் விஜய்யை பார்க்க முடியவில்லையே என்ற தவிப்பில் இருந்தனர்.

விஜய்யுடன் சந்திப்பு

இதையடுத்து த.வெ.க.வில் சமீபத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களை, முதலமைச்சர் விஜய் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுக்க முடிவு செய்திருந்தார். இதற்காக முதலமைச்சர் விஜய் இன்று மாலை சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்துக்கு வருகிறார். அங்கு அவர்களை முதலமைச்சர் விஜய் சந்தித்து பேசுகிறார்.

அப்போது மேலும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைகிறார்கள். அதன்பிறகு கட்சியில் ஏற்கனவே இணைந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் 100 பேருடன் முதலமைச்சர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com