

சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தேர்தலில் நம்முடைய கட்சியின் சார்பில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிக்குழு நியமனம் செய்யப்பட்டது. ஆங்காங்கே தோழர்கள் தொகுதி வாரியாக கட்டுக்கோப்பாக இருந்து சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். ஒரு சில தொகுதிகளை தவிர அது தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நாம் போட்டியிடாத பிற தொகுதிகளில் நம்முடைய தோழமை கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தேர்தல் பணியாற்றியதில் ஒரு சில தொகுதிகளில் இருந்து தோழர்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்றவில்லை என்கிற தகவல்கள் வந்துள்ளன. அது குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
நான் இந்த தேர்தலில் போட்டியிடுவது என்று எடுத்த முடிவின் காரணமாக ஒரு அதிர்ச்சி அல்லது பலருக்கும் வியப்பை தருகிற நிலை உருவானது. ஏன்? என்ன காரணம்? இவர் எம்.பி.யாக இருக்கிறார். இன்னும் 3 ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கிறது. எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று ஏன் இவர் முடிவு எடுத்தார்.
பலரும் தங்கள் யூகங்களை எல்லாம் செய்திகளாக்கிக் கொண்டு இருந்தார்கள். அதற்குரிய காரணங்களை நான் விளக்கி இருக்கிறேன்.
நான் தேர்தலில் போட்டியிட போகிறேன் என்பது குறித்து முன்கூட்டியே யாரிடத்திலும் விவாதிக்கவில்லை. அதற்கு காரணம் அதிலே எனக்கு வேண்டாம் என்ற இரண்டாவது கருத்தும் இருந்தது.
போட்டியிட வேண்டும் என்கிற ஒரு கருத்தும் இருந்தது. வேண்டாம் என்ற ஒரு கருத்தும் இருந்தது. எனவே இது குறித்து நான் முன்னணி தோழர்களிடம் முன் கூட்டியே கலந்து பேசவில்லை. திடீரென நான் போட்டியிடுவதாக அறிவித்தேன். நம்முடைய முன்னணி தோழர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். மற்றவர்கள் எப்படியோ அது வேறு.
நான் போட்டியிடுவது என்று முடிவு எடுத்ததும் காட்டுமன்னார்குடி தொகுதியில்தான் என்று அறிவித்ததும், அதனால் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வனை செய்யூருக்கு மாற்றியதும், அதன் அடிப்படையில் இயக்க தோழர்கள் அதிர்ச்சிக்குள்ளானதும் ஒரு இயல்பான நிலைதான்.
புதிய முகங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதை ஒரு நிலைப்பாடாக நான் எடுக்க வேண்டிய கட்டாயம் எழுகிறது. அந்த அடிப்படையில்தான் பொதுத்தொகுதிகளில் வென்ற ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோருக்கு இந்த முறை நான் வாய்ப்பு தர இயலாமல் போனது. ஆனால் அதற்கு வெவ்வேறு காரணங்களை பலரும் சமூக ஊடகங்களில் எடுத்து சொன்னார்கள், விவாதித்தார்கள். இந்த காரணங்கள் எதுவும் உண்மையல்ல.
தி.மு.க. கூட்டணியில் உறுதியோடு இருப்போம் என்ற முடிவை திருமாவளவன்தான் எடுக்கிறார். தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் நீடிப்பதற்கு உரிய காரணங்களை திருமாவளவன்தான் விளக்குகிறார்.
அதை பின்பற்றிதான் இயக்க தோழர்கள், நமது சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேருமே சட்டமன்றத்தில் பேசினார்கள். அது எப்படி எனக்கு முரண்பாடானதாக இருக்க முடியும். அது முற்றிலும் தவறான ஒரு கருத்து. அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற ஒரே காரணத்தை வைத்து தி.மு.க.வுக்கு அவர்கள் நெருக்கமாக இருந்தார்கள்.
அதனால்தான் பனையூர் பாபு உள்பட 3 பேருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை என்று சொன்னார்கள். இது முற்றிலும் தவறானது என்பதை நான் ஏற்கனவே விளக்கி விட்டேன்.
புதிய முகங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பது ஒவ்வொரு கட்சியிலும் இருக்கின்ற நடைமுறைதான். தி.மு.க.வில் கூட 60 புதிய முகங்களுக்கு வாய்ப்பு தந்திருக்கிறார்கள். அப்படியென்றால் 60 எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. அதைப் பற்றி யாருமே பேசவில்லை.
விடுதலை சிறுத்தைகளை பற்றி மட்டும் பேசுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் எடுத்த முயற்சிக்கு திருமாவளவன் இணங்காமல் தி.மு.க. கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு முதன்மை காரணியாக இருந்திருக்கிறார் என்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சகித்துக் கொள்ள முடியவில்லை.
நம்மீது அவர்களின் காழ்ப்புணர்வை கக்க வேண்டும் என்பது அடிப்படை காரணம். பா.ஜ.க. எங்கள் கொள்கை எதிரி என்று விஜய் சொன்னார். அந்த ஒற்றை சொல்லை தவிர அடுத்த வார்த்தை பா.ஜ.க.வுக்கு எதிராக அவர் பேசியதே இல்லை. அவரது நோக்கம் தி.மு.க. ஆட்சியை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான்.
தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்தி விட்டால் அடுத்தது யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பதை பற்றி அவருக்கு அக்கறை இல்லை. பா.ஜ.க. அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் அவருக்கு கவலை இல்லை. அந்த நோக்கத்தில்தான் அவர் செயல்படுகிறார் என்பதை நாம் தேர்தல் களத்தில் அம்பலப்படுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.