

தவெக தலைவர் விஜய் நாளை திருச்சி கிழக்குத் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பிரசாரத்தில் வயதானவர்கள், கர்ப்பிணிகள், சிறுவர், சிறுமியர் கலந்துகொள்ள வேண்டாம் என தவெக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர், தமிழ்நாடு மக்களின் வெற்றித் தலைவர், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதை அனைவரும் அறிவீர்கள்.
இந்நிலையில், நாளை திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே மதியம் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரை, கழகத் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
மேலும் பிற தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி பெறும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் அறவே பின்தொடரக் கூடாது.
அத்துடன் இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.