என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் பலமுனை போட்டி இருந்தாலும் பலம் பொருந்திய போட்டியாக இல்லை- மு.க.ஸ்டாலின்
- போர்வையை போர்த்திக் கொண்டு உள்ளுக்குள் என்ன செய்யணுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.
- தமிழ்நாட்டில் 2026 தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயான தேர்தல்.
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நேர்காணல் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
அப்போது அங்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- திராவிட மாடல் ஆட்சி பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்:-
என் பேச்சில் தெளிவாக சொல்லி உள்ளேன். மதசார் பின்மை, சோசலிசம் பாசிசத்தை எதிர்க்கணும் இதுதான் திராவிட மாடல். எல்லோருக்கும் எல்லாம் என்ற எங்கள் கொள்கையை வழிவகுத்து கொண்டு எங்களது திட்டங்களை நிறைவேற்றி கொண்டிருக்கிறோம்.
கேள்வி:-பா.ஜ.க. அந்த மாடலை பின்பற்றவில்லை என்று சொல்கிறீர்களா? அவர்களது கூட்டணி கட்சி கூட திராவிட மாடல்தான் பண்ணுவதாக கூறுகிறார் களே?
பதில்:- நிச்சயமாக இல்லை. அதை உறுதியாக சொல்கிறேன். பயன்படுத்தி கொள்கிறார்கள். அவ்வளவுதான்.
போர்வையை போர்த்திக் கொண்டு உள்ளுக்குள் என்ன செய்யணுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி:- பலமுனை போட்டி களத்தில் இருக்கிறது என்கிறார்கள்? நீங்கள் பலமுனை போட்டியாக பார்க்கிறீர்களா? அப்படி வந்தாலும் அது உங்களுக்கு சாதகமா? எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:-நிச்சயமாக பல முனை போட்டி இருக்கலாம். ஆனால் பலம் பொருந்திய போட்டியாக இல்லை அது.
கேள்வி:- பிரதமர் மோடி 3 முறை இந்த மாதம் வரப்போகிறார். பா.ஜ.க. ரொம்ப தீவிரமாக இருக்கிறது தமிழ்நாட்டில் அவர்கள் கூட்டணியை வெற்றி பெற வைப்பதற்கு? இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- நான் அடிக்கடி சொல்வதுதான் பிரதமர் அடிக்கடி வர வேண்டும். அமித்ஷா அடிக்கடி வர வேண்டும். இந்த கவர்னரை மாற்றக் கூடாது. இதுவே எங்களுக்கு பெரிய பிரசாரம்.
கேள்வி:- மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தி ருக்கிறீர்கள். இது மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருக்கிறது. இதை உங்களது கடமை என்று நினைக்கிறீர்களா? அல்லது தேர்தலுக்கான விளையாட்டா?
பதில்:-தொடக்கத்திலேயே இதற்கு நான் விளக்கம் கொடுத்தேன். இதற்கு மேல் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி:- இந்தியா கூட்டணிக்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டும் என்று மணிசங்கர் அய்யர், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலரும் சொல்கிறார்களே? அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் ஏற்பீர்களா?
பதில்:- தலைவர் கலைஞர் ஏற்கனவே ஒரு முறை சொல்லி இருக்கிறார். என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன்.
கேள்வி:- சட்டசபை தேர்தல் வெற்றி எப்படி அமையும்?
பதில்:- தமிழ்நாட்டில் 2026 தேர்தல் என்பது ஜன நாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயான தேர்தல். என்.டி.ஏ.-தமிழ்நாடு இடையேயான தேர்தலில் நிச்சயம் தமிழ்நாடு வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.






