தமிழக மக்களின் நலனை த.வெ.க அரசு மீட்டெடுக்கும் - ஆதவ் அர்ஜுனா

தமிழக மக்கள் தங்களுக்கான சாமானியர் கையில் தங்கள் மக்களாட்சியை ஒப்படைப்பர்.
தமிழக மக்களின் நலனை த.வெ.க அரசு மீட்டெடுக்கும் - ஆதவ் அர்ஜுனா
Published on

தமிழக சட்டமன்றத்தில் எடுத்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மைபெற்று தவெக அரசு வெற்றி பெற்றது.

இதுதொடர்பாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசியல் சமரசமற்ற சமத்துவ போராட்டத்திற்கு பெயர்போனது. ஒவ்வொரு காலமும் அதனை வென்றெடுக்க, தமிழக மக்கள் தங்களுக்கான சாமானியர் கையில் தங்கள் மக்களாட்சியை ஒப்படைப்பர்.

1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா வென்றடுத்தது அத்தகைய சாமானிய மக்களின் புரட்சி. 1977 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வென்றது மீண்டுமொரு சரித்திரப் புரட்சி.

அத்தகைய வரலாற்றுப் பொறுப்பை அரை நூற்றாண்டுக்கு பிறகு, அவர்கள் வீட்டுப் பிள்ளையான கழகத் தலைவர் அவர்களுக்கும், அவர் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள்.

தேர்தலில் மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியாக தேர்வான நாம், இன்று அனைத்து மதச்சார்பற்ற தோழமை கட்சிகளின் ஆதரவோடு சட்டப்பேரவை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்றிருக்கிறோம்.

"மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகளில்" உறுதிக்கொண்டு, மக்களுக்காக பணி செய்ய வந்திருக்கும் நம்மை வாழ்த்தி ஆதரவளித்த அனைத்து தோழமை கட்சிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்.

தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தலைமையிலான ஆட்சி, தமிழ் நிலத்தின் உரிமையையும், அனைத்து மக்களுக்குமான நலனையும் மீட்டெடுக்கும். நம் பெருந்தலைவர்கள் காட்டிய கொள்கைப் பாதையில், எந்தவித சமரசத்திற்கும் இடமின்றி பயணிக்கும். இந்த காலத்தின் பொறுப்பில் அனைவரும் கைகோர்த்துப் பயணிப்போம். புது வரலாறு படைப்போம்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com