‘ஆளும்கட்சியை விமர்சித்தால் திமுக துடைத்தெறியப்படும் என்பது ஜனநாயக மரபுகளுக்கு உடன்பாடானவை அல்ல’ - அமைச்சர் ஷாஜகான் பேச்சுக்கு முகம்மது முபாரக் பதில்

தமிழ்நாடு அரசியல் களம் எப்போதும் கொள்கை ரீதியான மோதல்களையும் கடந்து, பண்பட்ட உரையாடல்களுக்குப் புகழ்பெற்றது.
‘ஆளும்கட்சியை விமர்சித்தால் திமுக துடைத்தெறியப்படும் என்பது ஜனநாயக மரபுகளுக்கு உடன்பாடானவை அல்ல’ - அமைச்சர் ஷாஜகான் பேச்சுக்கு முகம்மது முபாரக் பதில்
Published on

ஆளும்கட்சியை விமர்சித்தால் எதிர்க்கட்சியான திமுக துடைத்தெறியப்படும் என்பது போன்ற தீவிரமான வார்த்தைகள் நமது ஜனநாயக மரபுகளுக்கு உடன்பாடானவை அல்ல என அமைச்சர் ஷாஜகானின் பேச்சுக்கு எஸ்பிடிஐ கட்சியின் தலைவர் முகமது முபாரக் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

“தமிழ்நாடு அரசியல் களம் எப்போதும் கொள்கை ரீதியான மோதல்களையும் கடந்து, பண்பட்ட உரையாடல்களுக்குப் புகழ்பெற்றது. இந்தச் சூழலில், நீண்டகாலம் திமுக கூட்டணியில் நீடித்து, தற்போது தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இணைந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் அவர்களின் பேச்சு சற்றே வருத்தமளிப்பதாக உள்ளது. அந்தப் பேச்சு நாகரிகமானது அல்ல.

அரசியலில் விமர்சனங்கள் இயல்பானவை என்றாலும், ஆளும்கட்சியை விமர்சித்தால் எதிர்க்கட்சியான திமுக துடைத்தெறியப்படும் என்பது போன்ற தீவிரமான வார்த்தைகள் நமது ஜனநாயக மரபுகளுக்கு உடன்பாடானவை அல்ல.

இத்தகைய ஆக்ரோஷமான போக்கு, திராவிட சித்தாந்தங்களையும், சிறுபான்மை மற்றும் தலித்திய இயக்கங்களையும் ஒழிப்போம் என்று பேசும் பாசிச பாஜகவின் பாணியையே நமக்கு நினைவூட்டுகிறது.

​"ஒரு பலமான எதிர்க்கட்சிதான் நல்ல ஆளுங்கட்சியை உருவாக்கும்" என்பது அரசியல் விதி. எனவே, எதிர்க்கட்சிகளின் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் விமர்சிப்பது என்பது அரசியலில் இயல்பானது. ஆனால், அதன் அரசியல் இருப்பையே கேள்விக்குள்ளாக்குவது ஆரோக்கியமான அரசியல் பண்பல்ல. மாற்றுக்கருத்துகளைக் கொண்டிருப்பது வேறு; மாற்றுக் கருத்தே இருக்கக் கூடாது என்று நினைப்பது வேறு.

​மக்களுக்கான அரசியலில் விமர்சனங்களைவிட விவாதங்களே ஆரோக்கியமானவை. மாற்றுக் கருத்துகளையும், விமர்சனங்களையும் சகிப்புத்தன்மையோடும் முதிர்ச்சியோடும் எதிர்கொள்வதே ஓர் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அமைச்சருக்கு அழகு.

ஆகவே, ஆளும் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் இன்னும் கூடுதல் பொறுப்புணர்வோடும், அரசியல் முதிர்ச்சியோடும் தங்களின் கருத்துகளை முன்வைக்க வேண்டும். எஸ்டிபிஐ கட்சி உட்பட பல்வேறு ஜனநாயக சக்திகளும், குறிப்பாகத் தமிழ்நாடு மக்களும் எதிர்பார்ப்பது இத்தகைய நாகரிக அரசியலையே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com