

தி.மு.க. முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 2016-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராகவும், தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சராகவும் பணியாற்றினார்.
நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் 3-வது முறையாக மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட த.வெ.க.வை சேர்ந்த முஸ்தபாவிடம் 19 ஆயிரத்து 128 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில் அவர் பல்வேறு காரணங்களால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
10 ஆண்டுகளுக்கு முன்பு, நான் எனது நீண்ட கால வெளிநாட்டுப் பணியை விட்டுவிட்டு, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சமூக நலனுக்காக உழைக்கவும் தேர்தல் அரசியலில் நுழைந்தேன்.
எனது முதல் நேர்காணலில், பொதுச் சேவையுடன் சேர்த்து எனக்கு 3 தனிப்பட்ட நோக்கங்களும் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தேன்.
அது, நீதிக்கட்சி காலம் தொட்டு சமூக நீதி இயக்கம் ஆற்றிய பங்களிப்புகளின் வரலாற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, எனது தந்தை மற்றும் முன்னோர்கள் மதுரை மக்களுக்காகச் செய்த பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது, எனது குடும்பத்திற்கான நற்பெயரை உருவாக்குவது, இவை தான்.
மேலும், 10 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு 60 வயதாகும்போது பொது வாழ்க்கையிலிருந்து விலகி, 2016-க்கு முன்பு நான் வாழ்ந்தது போல சர்வதேச அளவிலான ஒரு தனிப்பட்ட குடிமகனாக வாழ விரும்புவதாகவும் கூறியிருந்தேன்.
எப்போதும் போல, வாழ்க்கை நாம் முழுமையாக கற்பனை செய்ய முடியாத வழிகளில் பயணிக்கிறது. ஒருபுறம், எனது கட்சி, மதுரை மத்திய தொகுதி மற்றும் தமிழ்நாடு (அமைச்சராக) ஆகியவற்றில் பல வழிகளில் என்னால் மாற்றங்களை ஏற்படுத்த முடிந்ததற்கும், எனது 3 தனிப்பட்ட இலக்குகளையும் பெருமளவில் அடைய முடிந்ததற்கும் நான் திருப்தி அடைகிறேன்.
இருப்பினும், நான் தொடங்கிய பல திட்டங்களையும் முயற்சிகளையும் என்னால் முழுமையாக முடித்து வைக்க முடியவில்லை. அமைச்சராக எனது முதல் பதவியான நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறையில் மற்றும் எனது இரண்டாவது பதவியான தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையில் சில சீர்திருத்தங்களும் புதிய முயற்சிகளும் முற்றுப்பெறாமல் உள்ளன.
மதுரைக்காக விரிவான புதிய பாதாள சாக்கடை மற்றும் புயல் நீர் வடிகால் அமைப்புகள், மத்திய சிறைச்சாலையை நகரத்திற்கு வெளியே மாற்றுவது, மதுரை மெட்ரோ போன்ற திட்டங்களை என்னால் நடைமுறைக்குக் கொண்டு வர முடியவில்லை.எனவே, 2026-ல் கட்சியிடம் மீண்டும் போட்டியிட வாய்ப்புக்கேட்டேன். அதன் மூலம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் விடுபட்ட பணிகளை முடிக்கலாம் என்று நம்பினேன்.
ஆனால், தேர்தல் முடிவைக் கருத்தில் கொள்ளும்போது, அந்த நம்பிக்கையை இப்போது தள்ளிப்போட வேண்டி உள்ளது. கடந்த 10 ஆண்டு களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தது என்பது, எனக்கும் எனது குழுவினருக்கும் இரவு-பகல் பாராத ஒரு தொடர் பொறுப்பாகவே இருந்தது.
இப்போது, ஒரு சில வாரங்கள் அந்தப் பொறுப்புகளில் இருந்து விலகி, எனக்கான நேரத்தை நானே முடிவு செய்யும் ஒரு சாதாரண குடிமகனாக வாழ ஆவலோடு இருக்கிறேன்.
நான் அமைச்சராக இருந்த காலத்தில், வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், சொற்பொழிவு ஆற்றவும் வந்த அழைப்புகளை ஏற்க எனக்குப் பலமுறை அனுமதி மறுக்கப்பட்டது.
இப்போது கிடைத்துள்ள இந்த இடைவெளி அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து நீண்ட நாட்களாக இருக்கும் அழைப்புகளுக்குப் பதிலளிக்க எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
முன்பே குறிப்பிட்டது போல,'ஹார்பர் காலின்ஸ்' நிறுவனத்திற்காக நான் எழுதவிருக்கும் புத்தகத்தின் வேலைகள் ஏற்கனவே தாமதமாகிவிட்டன. இந்த ஓய்வு நேரத்தை அந்தப் புத்தகத்தை எழுதுவதற்காகப் பயன்படுத்திக் கொள்வேன்.
மேலும், சமீபத்தில் நான் 60 வயதை எட்டியுள்ளதால், எனது அன்றாடப் பழக்க வழக்கங்களை முறைப்படுத்தி, உடல்நலத்தை மேலும் மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
நான் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்த அனைவருக்கும், குறிப்பாக மதுரை மத்திய தொகுதி வாக்காளப் பெருமக்க ளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த தேர்தல் வரை நான் ஒரு மக்கள் பிரதிநிதியாக இருக்கப் போவதில்லை என்ற உண்மையை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும், பொதுச்சேவை மீதும், சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற என் மீதான ஆர்வம் சற்றும் குறையவில்லை. மீண்டும் வருவேன் - புதிய ஆற்றலோடும், புத்துணர்ச்சியோடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் இந்த முடிவு தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.