டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் தொகை வாங்கினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் விக்னேஷ்

டாஸ்மாக்கில் ஊழல் அதிகமாக உள்ளது.
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் தொகை வாங்கினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் விக்னேஷ்
Published on

கோவை, கிணத்துக்கடவு எம்எல்ஏ விக்னேஷ் தவெக அமைச்சரவையில் மதுவிலக்கு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வசூலிப்பதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் அதுகுறித்து அவர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "டாஸ்மாக்கில் ஊழல் அதிகமாக உள்ளது. டாஸ்மாக் துறையில் அதிரடி மாற்றம் இருக்கும்.

டாஸ்மாக் வருமானம் தனிமனித கணக்கிற்கு செல்கிறது. பாட்டில்களுக்கு ரூ.10 வாங்குவது தவறு. MRP-க்கு மேல் ரூ.1 கூட வாங்க கூடாது என முதல்வர் விஜய் உறுதியாக தெரிவித்துள்ளார். அவ்வாறு வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல 10 மணிக்கு மேல் எந்த கடையும் இயங்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட அலுவலர்களுடன் நடத்திய கூட்டத்தில், தனியார் பார்கள் முறையாக செயல்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலும் தடுக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

விதிமீறல்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

மேலும் கோவில் பள்ளிகளுக்கு அருகில் இங்கும் 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்த உத்தரவை விரைந்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com