திருமண விழாவில் ஒரே மேடையில் உதயநிதி - சீமான்!

திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா இல்ல விழாவில் இருவரும் பங்கேற்றனர்.
Udhayanidhi Stalin - Seeman
Published on

சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில்,எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒரே மேடையில் சந்தித்து பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக்கொண்டனர்.

திமுக பிரமுகர் வீட்டுத் திருமணம்..

திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா அவர்களின் இல்லத் திருமண விழா இன்று சென்னை திருவேற்காட்டில் நடைபெற்றது. இந்த சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உதயநிதி ஸ்டாலின் மற்றும் சீமான் ஆகிய இரு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், விழாவில் கலந்துகொள்ள இருவருமே வருகை தந்தனர்.

கட்டியணைத்து நலம் விசாரிப்பு..

திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலினும், சீமானும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது, அரசியல் முரண்பாடுகளைத் தாண்டி இருவரும் நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்துத் தங்களது அன்பைப் பரிமாறிக் கொண்டனர். பின்னர் இருவரும் அங்கு போடப்பட்டிருந்த சோபாவில் அருகருகே அமர்ந்து சிரித்து கொண்டே தங்களின் பரஸ்பர உறவை பகிர்ந்துகொண்டனர்.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..

பொதுக்கூட்டங்களிலும் ஊடகங்களிலும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இந்த திடீர் சந்திப்பு மற்றும் அவர்கள் காட்டிய அரசியல் நாகரிகம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் சீமானும் மு.க.ஸ்டாலினும் சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com