ஆறுமுகநேரி அருகே ஐயப்ப பக்தர்களின் கார் மோதி சிறுமி பலி

தந்தையுடன் நடைபயிற்சி சென்ற சிறுமி கார் மோதி பலியான சம்பவம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
விபத்து
விபத்து
Published on

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள ராஜபதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகேஷ்(வயது 35). இவர் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு மிருதுளா பார்கவி(9) என்ற மகள் உள்ளனர். மிருதுளா பார்கவி ஆறுமுகநேரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் ஆறுமுகநேரியை அடுத்த பெருமாள்புரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

சுப்பிரமணியன் மகேஷ் தினமும் அதிகாலையில் காயல்பட்டினம் சாலையில் உள்ள போலீஸ் சோதனைசாவடி வரை நடைபயிற்சி மேற்கொள்வார். இன்று அதிகாலை சுப்பிரமணியன் மகேஷ் வழக்கம்போல் நடைபயிற்சி செல்வதற்காக புறப்பட்டு சென்றார்.

அப்போது அவரது மகள் மிருதுளாவும், அப்பாவுடன் செல்வேன் என்று அடம்பிடித்துள்ளார். உடனே சுப்பிரமணியன் மகேசும் தனது மகளை நடைபயிற்சிக்கு அழைத்து சென்றார். திருச்செந்தூர்- காயல்பட்டினம் பைபாஸ் சாலையில் 2 பேரும் நடைபயிற்சி சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது எதிரே கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வேன் திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வழியாக தூத்துக்குடி சென்று கொண்டிருந்தனர். கடுமையான பனி காரணமாக எதிரே நடைபயிற்சி வந்த 2 பேர் மீதும் கார் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் மிருதுளா பார்கவி படுகாயம் அடைந்தார். சுப்பிரமணியன் மகேசுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. உடனே அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி மிருதுளா பார்கவி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சுப்பிரமணியன் மகேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தந்தையுடன் நடைபயிற்சி சென்ற சிறுமி கார் மோதி பலியான சம்பவம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com