

தமிழகத்தில் 234 தொகுதிகளில், மேற்கு வங்கத்தில் 293 தொகுதிகளில், கேரளாவில் 140 தொகுதிகளில், அசாமில் 126 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் விஜயின் தவெக 110 இடங்களில் முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி 62 இடங்களிலும், அதிமுக கூட்டணி 61 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
கேரளாவில் 140 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 71 இடங்கள் தேவை. அங்கு காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணி தற்போது 89 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் பினராயி விஜயனின் இடது முன்னணி 36 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மைக்கு 148 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி 194 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 94 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அதேபோல அசாமில் பெரும்பான்மைக்கு 64 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 23 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
கடந்த ஏப்ரலை 29 மாலை வெளியான பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி கேரளாவில் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் பாஜக, அசாமில் மீண்டும் பாஜக வெல்லும் என கணிக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இந்த கணிப்புகள் சரியாக பொருந்தியுள்ளன.
ஆனால் தமிழ்நாட்டில் ஆக்சிஸ் மை இந்தியா உள்ளிட்ட சில அமைப்புகளின் கருத்து கணிப்புகள் மட்டுமே விஜய்யின் தவெக 98 முதல் 120 இடங்கள் வரை வெற்றி பெறும் என கணித்திருந்தன.
மற்ற பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக வெற்றி பெறும் என்றும் வேறு சில கணிப்புகள் அதிமுக வெல்லும் என்றும் தவெக மூன்றாம் இடம் பெறும் எனவும் கணித்தன.
ஆனால் தற்போதைய நிலவரப்படி 110 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கும் தருவாயில் தவெக உள்ளது.
இதன் மூலம் மற்ற மாநிலங்களை போலல்லாமல் தமிழ்நாட்டில் கருத்துக்கணிப்புகளை தவெக தவிடுபொடியாகியுள்ளது கவனம் பெற்று வருகிறது.