

வேலூரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது தொகுதி மறுவரையறை தொடர்பாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,
“எப்படிப்பட்ட நிலையில் நாம் இந்தத் தேர்தலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, பசியும் வறுமையும்தான் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை நிலையாக இருந்தது.
அந்த அவலநிலையை மாற்ற வேண்டும் என்று இந்திய அரசு கொண்டு வந்ததுதான் குடும்பக் கட்டுப்பாடு திட்டம். “அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள்” என்று சொன்னார்கள்.
சொன்ன மாதிரியே, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களும், இன்னும் சில மாநிலங்களும் அளவோடு பெற்று, வளமான எதிர்காலத்தை நோக்கி நடைபோட ஆரம்பித்திருக்கிறோம்.
ஆனால், இப்போது ஒன்றிய அரசு என்ன பண்ணப் போகிறது என்றால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, வளர்ச்சியை நோக்கி நடைபோட்டதற்காகவே நம்மைத் தண்டிக்கப் பார்க்கிறார்கள்.
நடக்கப் போகும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதற்கான சதித் திட்டத்தைச் சட்டமாக நிறைவேற்றலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். இன்றைக்கு மதியம் கூட இதுசம்பந்தமாக, பிரதமர் மோடிக்கு நான் எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறேன்.
தமிழ்நாடு என்பதை வெறும் மாநிலமாகவோ, நிலப்பரப்பாகவோ மட்டும் பார்க்கக் கூடாது. எட்டுக் கோடி தமிழ் மக்களின் உணர்வும், உரிமைக்குரலும்தான் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் குரல்வளையை நெரிக்க நினைத்தால் நாம் சும்மா இருக்கக் கூடாது.
நாம் எதிர்கொண்டிருக்கும் ஆபத்து குறித்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து கொண்டிருக்கின்ற பாசிச, நாசகார வேலைகள் குறித்துப் பேசினால், “படிப்பறிவற்றவர்கள்” என்று சொல்லியிருக்கிறார் பியூஷ் கோயல். மிகவும் திமிர்த் தனமாக நாவடக்கமின்றி பேசுகிறார்.
பியூஷ் கோயல் அவர்களே நாவை அடக்கிப் பேசுங்கள். நீங்கள் தமிழ்நாட்டு பா.ஜ.க.வுக்கு மட்டும்தான் இன்-சார்ஜ். அதை மறந்துவிட்டு, அத்துமீறி வாய்க்கொழுப்புடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இங்கு மரியாதை கொடுத்தால்தான், திரும்ப மரியாதை கிடைக்கும். பா.ஜ.க. தமிழ்நாட்டை பற்றித் தவறாக எடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
பிரதமர் அவர்களே... உங்கள் முன்னால் கைகட்டிக்கொண்டு அடிமையாக இருக்கிறார்களே சிலர்... அவர்களை வைத்துத் தமிழ்நாட்டைக் குறைத்து எடைபோடாதீர்கள்.
தமிழர்கள் அறிவானவர்கள் - சுயமரியாதைமிக்கவர்கள். எங்கள் தன்மானத்தின் மீது கை வைத்தால், டெல்லியில் இருக்கும் உங்களது ஆணவத்துக்கு நாங்கள் கொடுக்கும் பதிலடி கடுமையானதாக இருக்கும்.
தமிழ்நாட்டுக்காக, தமிழினத்துக்காகப் போராட இப்போது யார் இருக்கிறார்கள்? தந்தை பெரியார் இல்லை; பெருந்தலைவர் காமராசர் இல்லை; பேரறிஞர் அண்ணா இல்லை; தலைவர் கலைஞர் இல்லை என்று நினைத்தீர்கள் என்றால், அது பெரிய தவறு.
அவர்களது முழு உருவமாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். அவர்களது ஆற்றல் எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ரூபத்தில் என்கூட இருக்கிறது. கடைசி மூச்சு இருக்கும்வரைக்கும், தமிழ்நாட்டினது, தமிழினத்தின் உரிமைகளுக்காக இந்த ஸ்டாலின் களத்தில் நிற்பான். சண்டை செய்துகொண்டே இருப்பான்.
பிரதமர் அவர்களே... தமிழ்நாடு தனது இறுதி எச்சரிக்கையைக் கொடுத்தாச்சு. நெருப்புடன் விளையாட வேண்டாம்.” என தெரிவித்தார்.