தமிழக தேர்தல் களத்தை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள ‘பிரியாணி’

இந்தியாவிலேயே தமிழகத் தேர்தலில் தான் தொண்டர்களை கவனிப்பதில் தனிப் பாணி கடைபிடிக்கப்படுகிறது.
தமிழக தேர்தல் களத்தை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள ‘பிரியாணி’
Published on

தமிழக அரசியல் களம் என்றாலே அது உணர்ச்சிகளோடும், உபசரிப்புகளோடும் பின்னிப் பிணைந்தது. அதிலும் தேர்தல் வந்து விட்டால் போதும், ஊர் எங்கும் போஸ்டர் வாசம் வீசுவதை விட, அண்டா அண்டாவாக வெந்து கொண்டிருக்கும் பிரியாணி வாசம்தான் அதிகமாக வீசும்.

பொதுவாக ஒரு தேர்தல் வருகிறது என்றால், அங்கே பணப்புழக்கம் என்பது பல வழிகளில் பாயும். சுவர் விளம்பரம் செய்யும் ஓவியர்கள், போஸ்டர் ஒட்டும் தொழிலாளர்கள், பிரமாண்ட மேடை அமைப்பாளர்கள், மைக் செட் உரிமையாளர்கள் என பலருக்கும் அது அறுவடைக் காலம். ஆனால், இவை அனைத்தையும் விட ஒரு தேர்தலின் வெற்றியையும், தொண்டர்களின் கூட்டத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக இன்று உருவெடுத்திருப்பது பிரியாணி என்றால் மிகையல்ல.

இந்தியாவிலேயே தமிழகத் தேர்தலில் தான் தொண்டர்களை கவனிப்பதில் தனிப் பாணி கடைபிடிக்கப்படுகிறது. காலையில் கொடி பிடிக்க வருபவர் முதல், மாலை பொதுக்கூட்டத்தில் கை தட்டுபவர் வரை அனைவரையும் கட்டிப்போடுவது மதிய உணவாக வழங்கப்படும் அந்த பொட்டல சோறுதான்.

முன்பெல்லாம் புளியோதரை, எலுமிச்சை சாதம் என்று இருந்தமெனு, இன்று ‘பிரியாணி' என்ற ஒற்றைச் சொல்லில் வந்து நிற்கிறது.

இதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய ரகசியம் ஒளிந்திருக்கிறது. ஒரு ஊரில் ஆயிரம் பேருக்கு உணவு தயார் செய்ய வேண்டும் என்றால், அதற்கு பல வகையான காய்கறிகள், கூட்டு, பொரியல் என தனித் தனியாகச் செய்வது கடினம்.

ஆனால், பிரியாணி அப்படி அல்ல. ஒரே அண்டாவில் இறைச்சியும், அரிசியும் வெந்து விட்டால் ஒரு முட்டையை வைத்து அப்படியே பார்சல் கட்டிவிடலாம். இது விநியோகஸ்தர்களுக்கு எளிது, சாப்பிடுபவர்களுக்கும் பிடிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக அதிக நேரம் கெட்டுப் போகாது என்பது கூடுதல் பலம்.

இந்த 2026 தேர்தலிலும் பிரியாணி விற்பனை என்பது முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு வேட்பாளர் தனது தொகுதியில் ஒரு நாளைக்கு ஐந்து இடங்களில் பிரசாரம் செய்கிறார் என்றால், அவருடன் வரும் சுமார் 500 முதல் 1000 தொண்டர்களுக்குக் குறைந்தது இரண்டு வேளை உணவு வழங்கப்பட வேண்டும்.

இதை கணக்கிட்டு பார்த்தால், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான அண்டாக்கள் அடுப்பில் ஏறும். இதனால் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியின் தேவை பல மடங்கு அதிகரிக்கும்.

குறிப்பாகப் பல்லடம் போன்ற பகுதிகளில் இருந்து கோழிகளும், வெளியூர்களில் இருந்து ஆடுகளும் லாரிகளில் அணிவகுக்கும். இது பண்ணையாளர்கள் முதல் உள்ளூர் கறிக் கடைக்காரர்கள் வரை அனைவருக்கும் ஜாக்பாட் அடிக்கும் காலமாக அமையும்.

அடுத்ததாக, இந்தத் தேர்தல் பிரியாணி என்பது ஒரு சங்கிலித் தொடர் பொருளாதாரத்தை உருவாக்குகிறது. பிரியாணிக்குத் தேவையான சீரகச் சம்பா அல்லது பாசுமதி அரிசி ஆலைகள் இப்போதே ஸ்டாக்குகளைத் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டன.

இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு போன்ற மசாலாப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் முதல், பிரியாணி பார்சல் கட்டப் பயன்படும் வாழை இலை மற்றும் பேப்பர் பாக்ஸ் தயாரிப்பாளர்கள் வரை அனைவருக்கும் இது வருமானம் வரும் நேரம். சிறிய தெருவோரக் கடைகள் கூட தேர்தல் நேரத்தில் பெரிய கேட்டரிங் நிறுவனங்களாக உருவெடுக்கும்.

“எங்களுக்கு 2000 பார்சல் வேண்டும்” என்று கட்சி நிர்வாகிகள் கொடுக்கும் ஒற்றை ஆர்டர், அந்தச் சிறு வியாபாரியின் வாழ்வாதாரத்தையே மாற்றிவிடும்.

தமிழக அரசியலில் பிரியாணிக்கு என ஒரு கவுரவ இடம் உண்டு. “எந்தக் கட்சியில் நல்லா கவனிச்சாங்க?” என்ற கேள்விக்குத் தொண்டர்கள் சொல்லும் பதில், அந்தப் பிரியாணியின் தரத்தைப் பொறுத்தே அமையும்.

சில இடங்களில் பிரியாணியில் பீஸ் குறைவாக இருந்தால் கூட அது தேர்தல் தோல்விக்கான அதிருப்தியாக மாற வாய்ப்புண்டு. அதனால், வேட்பாளர்கள் இப்போது உணவின் தரத்தில் சமரசம் செய்வதில்லை. இதற்காகவே ஸ்பெஷல் மாஸ்டர்களை வரவழைத்து, ஆங்காங்கே தற்காலிகச் சமையல் கூடங்களை அமைத்துள்ளார்கள்.

இன்னொரு பக்கம், பிரியாணி டோக்கன் கலாசாரம் இந்தத் தேர்தலில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கூட்டத்திற்கு வரும் நபர்களுக்கு ஒரு டோக்கன் வழங்கப்படும். அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட ஓட்டல்களுக்குச் சென்று அந்த டோக்கனை கொடுத்தால், சூடான பிரியாணி கிடைக்கும். இதன் மூலம் ஓட்டல் உரிமையாளர்களுக்குத் தேர்தல் முடியும் வரை கல்லா கட்டும்.

இது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், திடீர் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். பிரியாணி பார்சல் கட்டவும், விநியோகம் செய்யவும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்குத் தற்காலிக வேலை கிடைக்கும்.

ஆகமொத்தத்தில் 2026 தேர்தல் என்பது வெறும் ஓட்டுப் பெட்டிகளுக்கான சண்டை மட்டுமல்ல, அது அடுப்பில் கொதிக்கும் பிரியாணி அண்டாக்களுக்கான போட்டியும் கூட. அரசியல் கட்சிகளின் சின்னங்கள் எதுவாக இருந்தாலும், தொண்டர்களின் பார்வையில் அது ஒரு ‘பிரியாணி' குறிப்பாக தான் தெரிகிறது.

எது எப்படியோ, இந்தத் தேர்தல் களம் அரசியல் சூட்டை விட, பிரியாணி அண்டாவின் சூட்டில் அனல் பறக்கப் போவது உறுதி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com