கிங் மேக்கருக்கு கிங் மேக்கர் யார்?

இனிவரும் காலங்களில் மூவரும் சேர்ந்தே செயல்படுவோம் என்று கூறியுள்ளனர்.
கிங் மேக்கருக்கு கிங் மேக்கர் யார்?
Published on

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திரு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பெருவாரியான வாக்குகள் பெற்று 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருந்தபோதிலும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உள்ளது.

இதனைத்தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமையுமா என்பது மக்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து இடதுசாரி கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் விசிக கட்சியினர் தாங்கள் மதசார்பற்ற முற்போக்கு சிந்தனை உடையவர்கள் என்றும் இனிவரும் காலங்களில் மூவரும் சேர்ந்தே செயல்படுவோம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் தவெக பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் அக்கட்சியினர் வாய்திறக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் தேமுதிக தலைவர் பிரேமலதாவும் திமுக கூட்டணியிலேயே தொடர்வோம் என்று கூறியுள்ளார்.

மேலும் மதசார்பற்ற தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்க காங்கிரஸ் கட்சியினர் முன்வந்துள்ளதாக கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார். அதன் முடிவுகளை ராகுல் காந்தி எடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் காங்கிரஸ் தலைமைக்கு கருத்து கேட்பு அனுப்பி வைக்கப்படும் என்றும் சோடங்கர் கூறியுள்ளார். இதனிடையே காங்கிரஸை தமிழகத்தில் நுழைய விடக்கூடாது என்று டெல்லியில் பாஜகவும் அவரச முடிவுகளை எடுக்க தயாராகி உள்ளது.

அதிமுக தலைவர் எடப்பாடி அவர்களும் சென்னையில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை வரவழைத்து ஆலோசனை நடத்துவது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே கூட்டணி அமைக்க தாமதமாகும் என்று தவெக எம்எல்ஏக்களை சென்னையிலேயே தங்ககவைக்க விஜய் திட்டமிட்டுள்ளார். பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்திய அவர், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெற்றி பெற்றோரை தங்கவைக்க முடிவெடுத்துள்ளார்.

மேலும் தமிழக ஆளுநர் அர்லேகருக்கு கடிதம் எழுதியுள்ள விஜய், விரைவில் பதவியேற்க தயாராகியும் வருகிறார். இந்நிலையில் தவெக யாரை கூட்டணியாக தேர்வு செய்ய போகிறது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com