சுதந்திரத் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வைகோ வலியுறுத்தல்

17, 18 தேதிகளில் அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்தது. தமிழ்ப் பெண்கள் நாசமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.
சுதந்திரத் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வைகோ வலியுறுத்தல்
Published on

இலங்கை முள்ளி வாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் தமிழீழம் உருவாக பொது வாக்கெடுப்பு நடத்த மதிமுக பொதுச்செயலாளர் வைக்கோ அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "மனிதகுல வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் சில நாடுகளில் நடந்த இனப் படுகொலைகளில் மிகவும் கோரமானதும், கொடூரமானதும், நினைத்தாலே நெஞ்சை நடுங்கச் செய்வதுமான படுகொலை முள்ளி வாய்க்கால் தமிழினப் படுகொலை ஆகும்.

வரலாற்றின் வைகறை காலத்திலிருந்து தனி அரசு அமைத்து வந்த ஈழத் தமிழினம், ஐரோப்பியர்கள் படையெடுப்பால் அரசு உரிமை இழந்து, குறிப்பாக பிரித்தானியர்களின் ஆதிக்க ஆட்சியால் சிங்களவர்களோடு இணைக்கப்பட்டு, அவர்கள் இலங்கைத் தீவை விட்டு வெளியேறியபோது சிங்களவர்களின் அடிமை நுகத்தடியில் ஈழத்தமிழர்கள் உரிமை இழந்து கொடிய அடக்குமுறைக்கு ஆளானார்கள்.

தொடக்க காலத்தில் அறவழியில் போராடிய ஈழத்தமிழர்கள், சிங்கள இனவெறி அரசால் போலிசாராலும், இராணுவத்தாலும் வேட்டையாடப்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகள் 1975 மே 5 ஆம் நாள் முதல் ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டார்கள்.

1987 ஆம் ஆண்டு இந்திய அரசு சிங்கள அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பின் இந்திய இராணுவம் சிங்களவர்களுக்குத் துணையாக ஈழத்தமிழர்களை நசுக்கும் துரோகத்தில் ஈடுபட்டது.

அதிலும் குறிப்பாக 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளை தாக்குகிறோம் என்று சொல்லிக் கொண்டே சிங்கள ராணுவம் அப்பாவி தமிழர்களை கொடூரமாகத் தாக்கும் அக்கிரமத்தில் ஈடுபட்டது.

2009 ஆம் ஆண்டில் அதன் உச்சகட்டமாக மே மாதத்தில் குறிப்பாக 17, 18 தேதிகளில் அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்தது. தமிழ்ப் பெண்கள் நாசமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.

ஏழு அணு ஆயுத வல்லரசுகளின் உதவியுடன் சிங்கள அரசு விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததுடன், ஆயிரமாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது. அதுவே முள்ளிவாய்க்கால் படுகொலை ஆயிற்று.

தமிழ்நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 வாலிபர்கள் இக்கொடுமையை எதிர்த்துத் தீக்குளித்து மாண்டார்கள். சமர்க்களத்தில் உயிர் நீத்த மாவீரர்கள் சிந்திய இரத்தம், அவர்களின் தியாகப் போராட்டம் ஒருக்காலும் வீண் போகாது.

தாய்த் தமிழகத்தில் வாழும் தன்மானத் தமிழர்கள் நடத்தப்பட்ட இனப் படுகொலைக்குக் காரணமான சிங்கள அரசை சர்வதேச நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவும், சுதந்திரத் தமிழீழம் காண ஈழத்தமிழர்களிடம் ஐ.நா.வின் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காணவும் சூளுரை மேற்கொள்வோம்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com