

தமிழ்நாட்டில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்ட விமான சேவைகளை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முழுவதுமாக நிறுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து ஒரு விமானம் கூட இயக்காமல், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால், அந்த நிறுவனத்தின் சொந்தப் பயன்பாட்டில் இருந்த விமானங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.
விமானங்களின் எண்ணிக்கை குறைந்ததால், லாபம் குறைவாக உள்ள வழித்தடங்களையும், செயல்பாட்டுச் செலவு அதிகமாக உள்ள வழித்தடங்களையும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கைவிட்டு வருகிறது. இதன்காரணமாக மதுரை, கோவையில் இருந்து உள்நாட்டு நகரங்களுக்கான சேவைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு முழுவதுமாக நிறுத்தப்பட்டன.
மதுரையில் இருந்து துபாய்க்கு இயக்கப்பட்ட விமானமும் 4 மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. மேலும் சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவுக்கு பெயரவிற்கு மட்டும் தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வந்த சேவைகளையும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சமீபத்தில் நிறுத்தி உள்ளது.